ஆயுள் காப்பீடு திட்டத்தை விற்பனை செய்ய நேரடி முகவர்களை தேர்ந்தெடுக்க வரும் 10ம்தேதி நேர்முக தேர்வு: தபால் துறை அறிவிப்பு
சென்னை: ஆயுள் காப்பீடு திட்டத்தை விற்பனை செய்ய, நேரடி முகவர்களை தேர்ந்தெடுக்க வரும் செப்டம்பர் மாதம் 10ம்தேதி நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது, என்று தபால் துறை அறிவித்துள்ளது. தாம்பரம் கோட்ட முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தபால் துறையின் ஆயுள் காப்பீடு திட்டத்தை விற்பனை செய்வதற்காக நேரடி முகவர்களை தேர்ந்தெடுப்பதற்கான நேர்முகத் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 10ம்தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வு, ஹெவிஎப் சாலையில் உள்ள ஆவடி பாசறை தலைமை தபால் அஞ்சலகத்தில் காலை 11 மணி அளவில் நடைபெறுகிறது. நேர்முகத் தேர்வில் அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும். இதற்கான நிபந்தனைகளை பொறுத்தவரை, விண்ணப்பதாரர் இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தால் நடத்தப்படும் 10ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது நேர்காணல் தேதியில் 18 ஆண்டுகள் பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
சுய தொழில் செய்பவர்கள் படித்த இளைஞர்கள், முன்னாள் ஆயுள் ஆலோசகர், எந்த ஒரு காப்பீட்டு நிறுவனத்தின் முன்னாள் முகவர்கள், முன்னாள் படைவீரர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மகிளா மண்டல் பணியாளர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், சுய உதவி குழுக்கள், கிராம பிரதான், கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் போன்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். இது அரசு வேலை அல்ல. முற்றிலும் கமிஷன் சார்ந்த பணி ஆகும். விண்ணப்பதாரர் வேறு எந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவராக இருக்கக் கூடாது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர் இந்திய ஜனாதிபதியின் பெயரில் தேசிய சேமிப்பு சான்றிதழ், கிசான் விகாஸ் பத்திரம் வடிவில் வைப்புத் தொகையாக ரூ.5000 மற்றும் தற்காலிக உரிமக் கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர் ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம், பான் கார்டு, ஆதார் அட்டை மற்றும் கல்வித் தகுதி, சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களை கொண்டு வர வேண்டும். பயணப்படி வழங்கப்படமாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.