தபால்துறை போல தொடங்கப்படவில்லை லஞ்ச ஒழிப்புத்துறையை 6 மாதத்தில் பலப்படுத்தணும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை: மதுரை மாவட்டம், எழுமலை அருகே அதிகாரிப்பட்டியைச் சேர்ந்த மலர்விழி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘என் கணவர் 2022ல் உயிரிழந்தார். அதிகாரிப்பட்டி கிராமத்தில் பரம்பரை சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்துக்கள் மோசடியாக பட்டா மாறுதல் செய்யப்பட்டது. இதை சரி செய்ய வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ரூ.2 லட்சத்து ரூ.45 ஆயிரம் லஞ்சம் கொடுத்தும் கூடுதல் பணம் கேட்டதால் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுத்தேன். எனது புகாரின் மீது வழக்குப்பதிந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: லஞ்சம் கேட்பதும், பெறுவதும் பெரும் குற்றமம். இதுதொடர்பாக புகார் வந்தால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். புகார்தாரர் ஆதாரங்களையும், துணை ஆவணங்களையும் அளிக்கவில்லை. இதனால் புகாரை கலெக்டருக்கு அனுப்பினோம் என லஞ்ச ஒழிப்புத்துறை கூறுவது நியாயமல்ல. தபால் துறையை போல் செயல்படுவதற்காக லஞ்ச ஒழிப்புத்துறை தொடங்கப்படவில்லை. இந்த புகார்களை விசாரிக்க தற்போதுள்ள ஊழியர்கள் போதுமானதாக இல்லை. இதனால், ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரித்தும், கட்டமைப்பு வசதிகளை அதிகரித்தும் லஞ்ச ஒழிப்புத்துறையை பலப்படுத்த தமிழக அரசு 6 மாதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மோசடியில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.