தேர்தலுக்கு பின் இந்தியா கூட்டணி கட்சிகள் ஒருவருடன் ஒருவர் மோதிக் கொள்வார்கள்: பிரதமர் மோடி பிரசாரம்
அராரியா: பீகார் சட்டமன்ற தேர்தலுக்கு பின் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ளவர்கள் ஒருவருக்கொருவர் தலைகளை உடைத்துக்கொள்வார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தின் அராரியா மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: பீகாரில் 15 ஆண்டுகால காட்டு ராஜ்ஜிய காலத்தில் மாநிலம் எந்த வளர்ச்சியையும் காணவில்லை. நெடுஞ்சாலைகள், பாலங்கள் கட்டப்படவில்லை. உயர்கல்வி மையங்கள் எதுவும் அமைக்கப்படவில்லை. முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியானது அந்த சகாப்தத்தில் இருந்து மாநிலத்தை மீட்டெடுப்பதற்கு மிகவும் கடினமாக உழைத்துள்ளது.
இன்று பீகாரில் ஏராளமான விரைவுச்சாலைகள், ஆறுகள் மீது பாலங்கள், நான்கு மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற உயர்க்கல்வி மையங்கள் உள்ளன. வளர்ச்சியை நோக்கிய இந்த பயணம் தடையின்றி தொடர்வதை தேசிய ஜனநாயக கூட்டணி மட்டுமே உறுதி செய்ய முடியும். ஒவ்வொரு ஊடுருவல்காரரையும் நாட்டில் இருந்து விரட்டி அடிப்பதற்கு அரசு உறுதிபூண்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் -ராஷ்ட்ரிய ஜனதா தளம் அவர்களுக்கு பாதுகாப்பை வழங்குகின்றது. அவர்களுக்கு சாதகமாக அரசியல்யாத்திரைகளை நடத்தி தவறான கதைகளை முன்வைக்கிறது.
ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் ஊடுருவல்காரர்கள் பின்வாசல் வழியாக நுழைவதற்கு முயற்சிக்கிறார்கள். அவர்கள் வாக்கு வங்கி அரசியலுக்காக அவ்வாறு செய்கிறார்கள். ஆனால் இது நாட்டு மக்களை பாதிக்கிறது. காங்கிரசுக்கும், ஆர்ஜேடிக்கும் இடையே உட்கட்சி மோதல்கள் நடந்து வருகின்றது. தேர்தல்களுக்கு பிறகு இந்த இந்திய கூட்டணியில் இருப்பவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் தலைகளை உடைத்துக்கொள்வதை காணலாம். இவ்வாறு அவர் பேசினார்.
* ஆட்சி மாற்றம் அவசியம் -லாலு
பீகாரில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், தனது மனைவி மற்றும் இந்தியா கூட்டணி முதல்வர் வேட்பாளரான தேஜஸ்வி யாதவ் ஆகியோருடன் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் பேசிய லாலு பிரசாத், ‘‘தவாவில் இருக்கும் ரொட்டியை திருப்பி போட வேண்டும். இல்லையெனில் அது எரிந்துவிடும். 20 ஆண்டுகள் மிக நீண்டது. இப்போது ஒரு புதிய பீகாரை உருவாக்குவதற்கு தேஜஸ்வி அரசு அவசியமாகும்” என்றார்.
* மீண்டும் வெற்றி பெறுவேன்- தேஜ் பிரதாப் யாதவ்
பீகாரில் ஜனசக்தி ஜனதா தள நிறுவனர் தேஜ் பிரதாப் யாதவ் கூறுகையில், ‘‘பீகார் தேர்தலுக்கு பின் எனது கட்சி ஒரு தீவிர அரசியல் சக்தியாக உருவெடுக்கும். மஹூவா மக்கள் என்னை மீண்டும் ஆசிர்வதிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். அவர்கள் ஏன் செய்ய மாட்டார்கள்? நான் அவர்களுக்காக உழைத்தேன். அது அவர்களுக்கு தெரியும்” என்றார்.
* பாஜவின் தோல்வியை பீகார் எழுதும் -அகிலேஷ்
பீகாரில் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் நடந்த பேரணியில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பேசுகையில், ‘‘பீகாரில் பாதி பேர் இன்னும் வாக்களிப்பதற்காக காத்திருக்கிறார்கள். இந்த முறை இளைஞர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியை அதிகாரத்தில் இருந்து வெளியேற்றி வேலைவாய்ப்புக்களை வழங்கும் ஒருமுதல்வரை தேர்ந்தெடுப்பார்கள். இந்த முறை பீகார் பாஜவின் தோல்வியை எழுதும்” என்றார்.
* பாஜ வாக்குகளை திருட முயற்சிக்கும் -ராகுல்
பீகாரின் பூர்னியாவில் பேரணியில் பேசிய ராகுல்காந்தி,‘‘பாஜ வாக்குகளை திருடுவதன் மூலமாக அனைத்து இடங்களிலும் தேர்தல்களில் வெற்றி பெற்றது. பாஜவும், தேர்தல் ஆணையமும் அரியானா தேர்தலை திருடிவிட்டன என்பதை முழு உலகிற்கும் காட்டியுள்ளோம். பீகாரிலும் வாக்குகளை திருடுவதற்கு அவர்கள் முயற்சிப்பார்கள். இதை தடுத்து நிறுத்தி அரசியலமைப்பை காப்பாற்றுவது பீகார் இளைஞர்களின் பொறுப்பாகும்” என்றார்.
* ராகுல் வெட்கப்பட வேண்டும் - அமித் ஷா
பீகாரில் தேர்தல் பேரணியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘‘ராணுவ வீரர்களின் சாதி மற்றும் மதம் குறித்து அறிவதற்கு முயன்றதற்காக ராகுல்காந்தி வெட்கப்பட வேண்டும். சாதி அல்லது மதத்தின் அடிப்படையில் ராணுவ வீரர்களிடையே நாங்கள் பாகுபாடு காட்டுவதில்லை” என்றார்.
* என்டிஏ அரசு வேரோடு பிடுங்கப்படும் -பிரியங்கா
பீகாரின் மோதிஹரியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி, ‘‘தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடந்தால் பீகார் மக்கள் இந்த தேசிய ஜனநாயக கூட்டணியை வேரோடு பிடுங்கி எறிந்துவிடுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
