Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உடலுக்கு மட்டுமல்ல, உலகுக்கும் நன்மை சேர்க்கும்; நேர்மறை சிந்தனைகள் மனித ஆயுள்காலத்தை அதிகரிக்கும்: சொல்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்

ஒரு மனிதனின் சிந்தனைதான், அனைத்து புதிய தொடக்கங்களுக்கும் திறவுகோல். இந்த சிந்தனை மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் அறிவியலும், விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் விண்ணைத் தொடும் அளவுக்கு வளர்ந்திருக்காது. நமது அடுத்தடுத்த செயல்களுக்கு அடிப்படையாக இருப்பதும் சிந்தனை தான். இப்படிப்பட்ட ஒப்பற்ற சிந்தனை திறனை அதிகரிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டு தோறும் பிப்ரவரி 22ம்தேதி (இன்று) உலக சிந்தனை தினம் அனுசரிக்கப்படுகிறது. சிந்தனை என்பது மனிதவாழ்வில் முன்னேற்ற பாதைக்கான வழியாக இருக்கிறது. அந்த வழியில் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்கவும் சிந்தனையே உதவுகிறது. நல்லசிந்தனையே நல்லமனிதனை உருவாக்குகிறது. சிந்தனை என்பது முழுமையான அறிவாற்றல் செயல்பாடு. நம்மை சுற்றியுள்ள உலகத்தை புரிந்து கொள்வதற்கும், அதற்கு எந்தவாறு பதில் அளிக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதற்கும் உதவுகிறது. நம் மூளையை உணர்வுப்பூர்வமாக பயன்படுத்துவதற்கும் சிந்தனை தான் உதவுகிறது.

படைப்பு சிந்தனை, விமர்சன சிந்தனை, தர்க்கசிந்தனை என்று பல்ேவறு சிந்தனைகள் மனிதனுக்குள் எழுகிறது. இதில் நல்லசிந்தனைகளே மனிதனின் மனதிற்கு புத்துணர்வு அளித்து உடல்நலத்தையும் சீராக்குகிறது என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். இது குறித்து உளவியல் சார்ந்த சமூகமேம்பாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் கூறியதாவது: செயல்கள், நடத்தை, அறிவாற்றல் ஆகிய மூன்றும் மனிதசிந்தனை செயல்முறையின் 3தூண்களாகும். இவை தனித்தனியாக இயங்குவதற்கு பதில் ஒன்ேறாடு ஒன்று கலந்தே செயல்படுகிறது. நம்மை சுற்றியுள்ள உலகத்தை உணரவும், நமது உணர்வு மற்றும் ஆழ்மனதின் ஆசைகளை கேட்கவும், அதற்கேற்ப பதில் அளிக்கவும் சிந்தனையே உதவுகிறது. மனிதர்களின் அனைத்து உணர்ச்சி பதிவுகளின் ஆதாரமாக இருப்பது சிந்தனை தான். இந்த சிந்தனைக்கும், மனிதர்களின் உடல்நலத்திற்கும் பெரும் தொடர்பு உள்ளது.

இந்த வகையில் மனித வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நல்லசிந்தனைகள் பெரும் பலன்களை தருகிறது. அதேநேரத்தில் தவறான சிந்தனையாக இருந்தால் வீடு, பணியாற்றும் இடம், சமூகம் என்று அனைத்து இடங்களிலும் சிக்கல்களுக்கு வழிவகுத்து விடுகிறது. ஒரு தவறான சிந்தனையால் எடுக்கப்படும் முடிவும், 99சதவீதம் தவறாகவே முடிகிறது. இதற்கு கண்கூடாக பலநிகழ்வுகளை நாம் கண்டுள்ளோம். அதேநேரத்தில் ஒருவர் நல்லசிந்தனையுடன் இந்த சமூகத்தில் வாழ்ந்தால், இறந்த பிறகும் அவரது சிந்தனைக்காக கொண்டாடப்படுகிறார். இதற்கும் நம்மிடையே ஏராளமானோர் உதாரணமாக உள்ளனர். விஞ்ஞானமும், அறிவியலும் மட்டுமே சிந்தனை என்பதில்ைல. மனிதநேயம், கருணை, சகோரத்துவம் என்று இயல்பாக நம்மிடம் இருப்பதும் உள்ளார்ந்த சிந்தனைகளின் வெளிப்பாடு தான் என்றால் அதுமிகையல்ல.

இது மட்டுமன்றி நேர்மறையான சிந்தனையால் மனஅழுத்தம் குறைகிறது. மனச்சோர்வு குறைகிறது. துயரம் தவிர்க்கப்படுகிறது. இதய ஆரோக்கியம் வலுப்பெறுகிறது. இதுபோன்ற பல்வேறு நிகழ்வுகள் உடல்நலத்திற்கும் பெரும் துணையாக நிற்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் நேர்மறையான சிந்தனைகள் என்பது நமது ஆயுட்காலத்தை அதிகரிப்பதற்கான அடித்தளங்கள் என்பதே உண்மை. மொத்தத்தில் நமது சிந்தனைகளே நம்மை உருவாக்குகிறது. இந்த சிந்தனைகள் நல்லசிந்தனைகளாக அமையும் போது, நம்மோடு பிறரையும் உயர்த்துகிறது. எனவே தீய சிந்தனைகளை தவிர்த்து, நல்லசிந்தனைகளோடு வாழ்வது உடலுக்கு மட்டுமல்ல, உலகுக்கும் பெருமை சேர்க்கும்.இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்

மூளையின் பயன் 7 சதவீதம் மட்டுமே

மனித சிந்தனைக்கு அடித்தளமாய் இருப்பது மூளை. ஆனால் ஒரு மனிதன் அவனது மூளையின் சக்தியை 6முதல் 7சதவீதம் மட்டுமே பயன்படுத்துகிறான். உலகின் மிகப்பெரிய விஞ்ஞானிகள் கூட, தங்கள் மூளையை 12சதவீதம் தான் பயன்படுத்துகிறார்கள். இப்படி குறைந்த அளவே பயன்படுத்தும் நிலையில் உலகில் அளப்பரிய சாதனைகளை படைத்து வருகிறோம். இப்படிப்பட்ட நிலையில் மனிதமூளையை இதற்கும் அதிகமான விகிதத்தில் பயன்படுத்தினால் உச்சக்கட்ட சாதனைகளை படைக்கலாம். இதற்கான பணிகளை இளையதலைமுறையினர் மூலம் முன்னெடுப்பது எதிர்காலத்தில் பெரும் சாதனைகளுக்கு வழிவகுக்கும் என்கின்றனர் மூளைநரம்பியல் வல்லுநர்கள்.

நட்பு-சகோதரத்துவம் நடப்பாண்டு இலக்கு

ஆண்டுதோறும் ஒரு இலக்கை நிர்ணயமாக வைத்து உலக சிந்தனை தினம் கொண்டாடப்படுகிறது. இதன்படி நடப்பாண்டு (2025) ‘நட்பு, சகோதரத்துவம் மற்றும் அதிகாரமளிக்கும் நாள்’ என்ற இலக்ேகாடு கொண்டாடப்படுகிறது. மேலும் இந்தநாளில் உலகம் முழுவதும் உள்ள பெண்சாரணர்கள் மற்றும் பெண்வழிகாட்டிகள், இளம்பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளைக்கு தீர்வுகாணவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களுக்கும் வாய்ப்புள்ள நிலையை உள்ளடக்கிய உலகத்தை உருவாக்க வேண்டும் என்பதே இந்த கருப்பொருளின் இலக்கு. மனித சிந்தனைகளின் பெண்கள் குறித்த பாலியல் பாகுபாடுகள் நிறைந்து நிற்பது மற்ெறாரு காரணம். எனவே நடப்பாண்டில் மேற்கண்ட இலக்கோடு உலக சிந்தனை தினம் அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

பல கதவுகளை திறக்கும் சாவி

‘‘சிந்தனை என்பது நமது எண்ணங்களின் தொகுப்பான ஒரு வெளிப்பாடு. இதயம், மனம் மற்றும் உடலை சிந்தனைகள் முழுமையாக ஆக்கிரமிக்கிறது. உயிர்வாழ்வில் இருந்து செழிப்பான மனதிற்கு நம்மை மாற்றக்கூடிய ஒரு மனநிலையே சிந்தனை என்றும் கூறலாம். இது நம்மை ஆக்கப்பூர்வமாக செயல்படவும், பதிலளிக்கவும் வழிவகுக்கிறது. தனிப்பட்ட சிந்தனை, பொதுசிந்தனை என்று இது 2வகைப்படுகிறது. தனிப்பட்ட மனிதராக இருந்தாலும் அவரது பரந்த நோக்கம் கொண்ட சிந்தனைகள், திறமையை வெளிப்படுத்துகிறது. அதோடு சமூக அரங்கிலும் அவருக்குரிய தனித்துவத்தை பெற்றுத்தருகிறது. அறிவுப்பள்ளி, உருவாக்கம், ஒழுக்கத்திற்கான பாதை என்று பல கதவுகளை திறந்து வைக்கும் சாவியே சிந்தனை என்றும் கூறலாம்,’’ என்பதும் மனவியல் சார்ந்த ஆய்வாளர்களின் கூற்று.

எதிர்மறை நீங்க எளிதான வழிகள்

மனிதனின் மனதில் தோன்றும் நல்ல எண்ணங்கள் நேர்மறை சிந்தனை என்றும், தீய எண்ணங்கள் எதிர்மறை சிந்தனைகள் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது. நமது எண்ணங்கள் பிறரின் உடலுக்கோ, மனதிற்கோ, தீங்கு விளைவிக்காமல் இருந்தால் அது நேர்மறை சிந்தனை. மாறாக துன்பம் விளைவித்தால் அது எதிர்மறை சிந்தனை. நமக்குள் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும் போது புத்துணர்ச்சி தரும் விஷயங்களை படிக்கலாம். இனிமையான பாடல்களை கேட்கலாம். தியானத்தில் ஈடுபடலாம். முடிந்தவரை நேர்மறையாக பேசும் நண்பர்களுடன் உரையாடலாம். மனதில் நிறைந்த இனிய நினைவுகளை அசைபோட்டு பார்க்கலாம். இவை அனைத்தும் எதிர்மறை சிந்தனையை தவிர்ப்பதற்கான எளிய வழிகள் என்பதும் உளவியல் ஆலோசகர்களின் அறிவுரை.