போரூர் அருகே வீட்டு உரிமையாளருக்கே தெரியாமல் வாடகை, குத்தகை, விற்பனை என வீட்டை விளம்பரம் செய்து ரூ.1.25 கோடி மோசடி செய்த நபர் கைது..!!
குன்றத்தூர்: போரூர் அருகே வீட்டு உரிமையாளருக்கே தெரியாமல் வாடகை, குத்தகை, விற்பனை என வீட்டை விளம்பரம் செய்து ரூ.1.25 கோடி மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். போரூர் அருகே கெருகம்பாக்கத்தில் வீட்டு உரிமையாளருக்கே தெரியாமல், அவரது வீட்டை வாடகை, குத்தகை மற்றும் விற்பனை என விளம்பரப்படுத்தி, பலரிடம் ரூ.1.25 கோடி பணமோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.சென்னை போரூர் அருகே கெருகம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீவத்ஸ் (43). இவர், தனக்கு சொந்தமான ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை புகைப்படம் எடுத்து, ‘வீடு வாடகைக்கு உள்ளது’ என்று விளம்பரப்படுத்தினார்.
மேலும், அந்த வீட்டை வைத்து ‘நோ புரோக்கர் உள்பட பல்வேறு சமூக வலைதளங்களில் வாடகை, குத்தகை மற்றும் விற்பனை’ என்றும் விளம்பரப்படுத்தியுள்ளார். இதை உண்மை என்று நம்பி, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பலரும் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை ஸ்ரீவத்ஸிடம் பணத்தை கொடுத்துள்ளனர்.இதுபோல் 50க்கும் மேற்பட்டோரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கிய ஸ்ரீவத்ஸ், வீட்டில் ஏற்கனவே வாடகை மற்றும் குத்தகைக்கு குடியிருந்தவரை காலி செய்ததும், தன்னிடம் பணம் வழங்கியவர்களில் முன்னுரிமை அடிப்படையில் அந்த வீட்டை பிடித்தவர்களிடம் குறிப்பிட்ட தேதியில் வந்து குடியேறும்படி கூறி அனுப்பி வைத்துள்ளார். இதில் ஒரு சிலரிடம் வங்கி கணக்கு மூலமாகவும், பலரிடம் பணத்தை எண்ணி பார்க்காமல் சரியாக உள்ளது என கூறி ரொக்கப் பணமாகவும் லட்சக்கணக்கில் ஸ்ரீவத்ஸ் பெற்றுள்ளார்.

