பெங்களூரு: சமூக வலைதளங்கள் மூலம் பிரபல தொலைக்காட்சி நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்து, ஆபாச வீடியோக்களை அனுப்பி வந்த டெலிவரி மேலாளர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். கன்னடம் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் பிரபல நடிகை ஒருவருக்கு, கடந்த மூன்று மாதங்களாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பேஸ்புக் மெசஞ்சர் வழியாக தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
பெங்களூரு ஒயிட்பீல்டு பகுதியில் உள்ள நிறுவனத்தில் டெலிவரி மேலாளராக பணிபுரியும் நவீன் கே என்பவரே இந்த செயலில் ஈடுபட்டது பின்னர் தெரியவந்தது. அவர், நடிகைக்கு ஆபாசமான குறுஞ்செய்திகளையும், தனது அந்தரங்க உறுப்புகளை காட்டும் வீடியோக்கள் உள்ளிட்ட வக்கிரமான காணொளிகளையும் அனுப்பி வந்துள்ளார். நடிகை, ‘நவீன்ஸ்’ என்ற பெயரிலான அவரது கணக்கை முடக்கியபோது, அவர் பல போலி கணக்குகளை உருவாக்கி தனது வக்கிரச் செயலை தொடர்ந்துள்ளார்.
இந்த தொடர் தொல்லையால் மனமுடைந்த நடிகை, கடந்த 1ம் தேதி நாகர்பாவி பகுதியில் உள்ள ஒரு உணவகத்திற்கு நவீனை வரவழைத்து, தனது செயல்களை நிறுத்திக்கொள்ளுமாறு நேரில் கண்டித்துள்ளார். ஆனால், நடிகையின் எச்சரிக்கையை புறக்கணித்த நவீன், அவரிடம் மிகவும் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நடிகை உடனடியாக அன்னபூர்ணேஸ்வரி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், நவீனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர் மீது பாலியல் துன்புறுத்தல், பின்தொடர்ந்து தொல்லை கொடுத்தல் உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
