புதுடெல்லி: 2027ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான முதல்கட்ட சோதனை பயிற்சி அடுத்த மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் மிருத்யுஞ்செய் குமார் நாராயண் நேற்று வௌியிட்ட அறிவிப்பில், “ஏப்ரல் 1 2026 முதல் பிப்ரவரி 28 2027 வரை இரண்டு கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கு முன்பாக, அதன் நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களை சோதிக்க பயிற்சி நடத்தப்பட உள்ளது.
இந்த கணக்கெடுப்பு முதன்முறையாக டிஜிட்டல் முறையில் நடத்தப்படுகிறது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் இந்த சோதனை பயிற்சி நடத்தப்படும். ஸ்மார்ட்போன்கள் மூலம் தரவுகள் சேகரிப்பு, ஜிபிஸ் கண்காணிப்பு, பலமொழி ஆதரவு மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு போன்றவை இதில் அடங்கும்.
34 லட்சத்துக்கும் மேற்பட்ட கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் மற்றும் சுமார் 1.3 லட்சம் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியாளர்கள் முழு பயிற்சியிலும் ஈடுபடுத்தப்படுவார்கள். கணக்கெடுப்பு பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கவும், சாத்தியமான சிக்கல்களை கண்டறிந்து சரி செய்வதற்கும் இந்த முன்சோதனை பயிற்சி மிகவும் முக்கியமானது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.