அரூர் : தமிழகத்தில் சேலம் மாவட்டம் பாக்கு உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. நாமக்கல் மாவட்டம் 2ம் இடத்திலும், தர்மபுரி மாவட்டம் 3ம் இடத்திலும் உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் அதிக அளவில் பாக்கு மரங்கள் உள்ளது. இப்பகுதியில் தென்கரைகோட்டை, ராமியம்பட்டி, ஜம்மனஹள்ளி, கர்த்தானூர், வாணியாறு அணை கட்டு மற்றும் சுற்றுபுற பகுதியில், லட்சக்கணக்கான பாக்கு மரங்கள் உள்ளது.
தற்போது பாக்கு அறுவடை சீசன் தொடங்கியுள்ளது. மாவட்டத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக, எப்போதும் இல்லாத அளவிற்கு நடப்பாண்டு பாக்கு விளைச்சல் அமோகமாக உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு சேர்த்து சேலம் பால் மார்க்கெட் பகுதியில் வாராந்தோறும் செவ்வாய்கிழமைகளில் பாக்கு விற்பனைக்கு என சந்தை கூடுகிறது. தமிழகம் முழுவதும் இருந்து பாக்கு வியாபாரிகள் வந்து மொத்தமாக பாக்குகளை கொள்முதல் செய்கின்றனர்.
அறுவடைக்கு ஆட்கள் கிடைக்காத சூழ்நிலையால், பாக்கு மரங்களை பராமரிக்கவும் அறுவடை செய்ய என மொத்த குத்தகைக்கு விட்டு விடுகிறார்கள். காய், பழம், பதப்படுத்தப்பட்ட பாக்கு என மூன்று விதமாக விற்பனைக்கு வருகிறது என்றனர்.


