பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு: 5 கி.மீ. தொலைவுக்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்!
சென்னை: மழையால் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதலே சாரல் மழையானது தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் உண்டாகி இருக்கிறது. சென்னை பூவிருந்தவல்லி, மதுரவாயல், போரூர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கோயம்பேடு, நெற்குன்றம், மதுரவாயல், வானகரம் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் அணிவகுத்து செல்கிறது. மதுரவாயல் மேம்பாலத்தை கடக்க அரை மணி நேரத்திற்கு மேலாக வாகனங்கள் நின்று கொண்டு இருந்தன. மழை காரணமாக சாலைகள் குண்டு குழியுமாக இருக்கிறது. அதைப்போன்று வாகனங்கள் பொறுமையாக செல்வதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, போக்குவரத்து போலீசாரை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதே போன்று சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
