தமிழகத்தின் அனைத்து பகுதி களிலும் பயிரிடப்படும் லாபகரமான பயிர் என்ற பெருமையைக் கொண்டது எள் பயிர். இதைப் பயிரிடும் முறை மிகவும் எளிது. பராமரிப்பு முறை அதைவிட எளிது. குறுகிய காலத்தில் அறுவடை செய்து விடுலாம். விலையும் நன்றாக இருக்கும். இதுபோன்ற காரணங்களால் அனைத்து விவசாயிக்கும் விருப்பமான பயிராக இருக்கிறது இந்த எள். இத்தகைய எள் பயிரின் விளைச்சலைப் பாதிப்படையச் செய்யும் பூவிதழ் நோய் குறித்தும், அதனைக் கட்டுப்படுத்தும் முறை குறித்து சில டிப்ஸ்களைத் தருகிறார்கள் நெல்லை அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலையத்தின் வை.ஜெய்கணேஷ், வன்னிகோனேந்தல் எலுமிச்சை ஆராய்ச்சி நிலையத்தின் மு.பழனிக்குமார், தேனி பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் ஜே.ராஜாங்கம் ஆகியோர்.
தமிழ்நாட்டில் எள் பயிர் விழுப்புரம், தஞ்சாவூர், ஈரோடு, கரூர், கடலூர், சேலம், திருவண்ணாமலை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மிக அதிக அளவில் பயிரிடப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் கார்த்திகைப் பட்டம், மாசிப் பட்டம் மற்றும் சித்திரைப் பட்டத்தில் விவசாயிகள் எள்ளைப் பயிரிட்டு பயனடைகிறார்கள். எள்ளில் வேர் அழுகல் நோய், சாம்பல் நோய், கருகல் மற்றும் இலைப்புள்ளி நோய், பூவிதழ் நோய் என்கிற பூ விழை நோய் உள்ளிட்ட நோய்கள் உண்டாகி பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இவற்றில் பூக்கள் அனைத்தையும் இலைகளாக மாற்றம் அடையச் செய்து மலட்டுத்தன்மையை உருவாக்கும் பூவிதழ் நோய் எள் விவசாயிகளுக்கு பெரும் சவாலாக விளங்குகிறது. எள் விதைகள் உருவாகாமல் முழுவதுமாக இலைகளாகவே காட்சியளிக்க வைக்கும் இந்த நோய் தமிழ்நாட்டில் எள் பயிரிடக்கூடிய அனைத்து இடங்களிலும் மிக அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.இந்நோயை உண்டாக்கக்கூடிய நுண்ணுயிரி பாக்டீரியாவுடன் தொடர்புடைய காண்டிட்டஸ் பைட்டோபிலாஸ்மா என்று அழைக்கப்படுகிறது.
இந்நோய் பாதிக்கப்பட்ட செடியின் பூக்கள் பச்சை இலைகளாக மாறி சிறியதாக காணப்படும். இலைகள் சிறுத்தும், பூக்கள் உருமாற்றம் அடைந்தும், மலட்டுத்தன்மை உடைய பூக்களாகவும் காணப் படும். நோய் பாதிக்கப்பட்ட மகரந்தம் அனைத்தும் பச்சையாக காணப்படும். கணு மற்றும் கணுவிடை பகுதியின் அளவுகள் குறைந்து நோய் பாதிக்கப்பட்ட செடி ஒரு புதர் போன்று தோற்றம் அளிக்கும். எள் செடியில் வெள்ளை நிறப் பூக்கள் பச்சை நிறமாக மாறி காணப்படும். எள் செடியின் பூ மொட்டு வீங்கி உருமாற்றம் அடைந்து காணப்படும். நோய் பாதிக்கப்பட்ட செடியில் எள் விதைகள் முதிர்ச்சி அடைவதற்கு முன்னரே காய் களில் விரிசல் உண்டாகும். இந்நோய் பூ பூக்கும் முன்னரே செடியை பாதித்தால் அனைத்து பூக்களுமே இலைகளாக உருமாற்றம் அடைந்து காட்சியளிக்கும். ஒரு சில அரிதான தருணங்களில் நோய் பாதிக்கப்பட்ட செடிகளில் உள்ள விதைகள் அறுவடைக்கு முன்னரே முளைக்க ஆரம்பித்து விடும்.
நோயைப் பரப்பும் பூச்சிகள்: இந்த நோயைத் தத்துப் பூச்சிகள் அதிக அளவில் பரப்பும். இந்தப் பூச்சிகள் இலைகளின் பச்சையத்தை உறிஞ்சி இலைகளை முழுவதுமாக பழுப்பு நிறமாக மாற்றிவிடும். இலைகளின் நுனிப்பகுதி சுருண்டு காணப்படும்.
ஒருங்கிணைந்த நோய் கட்டுப்பாடு:
வேப்ப எண்ணையை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30 மி.லி. என்ற அளவில் கலந்து தெளிப்பதன் மூலம் நோயைப் பரப்பக்கூடிய பூச்சிகளைக் கட்டுப்படுத்த முடியும். மீத்தைல் டெமட்டான்/ குயின்லாபாஸ் என்ற பூச்சிக்கொல்லி மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மி.லி. என்ற அளவில் கலந்து தெளிப்பதன் மூலம் இந்நோயைப் பரப்பக்கூடிய தத்துப்பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். நோய் பாதிக்கப்பட்ட செடிகள் வயலில் தென்பட்டால் அவற்றை முழுவதுமாக அகற்றி விடுவது நல்லது.எள் செடியுடன் ஊடுபயிராக துவரையை (6:1 என்ற விகிதத்தில்) பயிரிடுவதன் மூலம் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம். டெட்ரா சைக்கிளின் என்ற மருந்தை 10 லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் என்ற அளவில் கலந்து தெளிப்பதன் மூலமும் இந்நோயைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால் இந்த மருந்து தெளிக்கப்பட்ட இடங்களில் 25 நாட்களுக்குப் பிறகு இந்நோயின் அறிகுறிகள் மறுபடியும் தோன்றும். அவ்வாறு தோன்றும் பட்சத்தில் மறுபடியும் இந்த மருந்தை மாதத்திற்கு ஒரு முறை தெளிக்கலாம்.
பருவங்களும் ரகங்களும்
ஆடிப்பட்டத்தில் (ஜூன், ஜூலை) டி.எம்.வி.3, டி.எம்.வி.4, டி.எம்.வி.5, டி.எம்.வி.(எஸ்.வி.)7, கோ1, பையூர் 1, வி.ஆர்.ஐ. (எஸ்.வி) 1 எள் ரகங்களைத் தேர்வு செய்து விதைக்கலாம். கார்த்திகைப் பட்டத்தில் (அக்டோபர், நவம்பர்) டி.எம்.வி.3, டி.எம்.வி.5, டி.எம்.வி.(எஸ்.வி) 7, வி.ஆர்.ஐ. (எஸ்.வி)2, எஸ்.வி.பி.ஆர்.4 எள் ரகங்களை விதைக்கலாம். மாசிப்பட்டம் (பிப்ரவரி, மார்ச்) அல்லது சித்திரைப் பட்டத்தில் (ஏப்ரல், மே) இறவைப் பயிராக டி.எம்.வி.3, டி.எம்.வி.4, டி.எம்.வி.6, வி.ஆர்.ஐ. (எஸ்.வி)1, வி.ஆர்.ஐ (எஸ்.வி)2, எஸ்.வி.பி.ஆர்1, டி.எம்.வி. (எஸ்.வி)7, கோ1 ரகங்களை விதைக்கலாம்.