*பயணிகள் பாதிப்பு
கூடலூர் : கூடலூர் அருகே சாலையில் பெரிய பெரிய பள்ளங்கள் உள்ளதால், அரசு பேருந்து அடிக்கடி பழுதாகி, பயணிகள் அவதி அடைகின்றனர். கூடலூரில் இருந்து ஓவேலி பேரூராட்சி, ஆரூற்றுப்பாறை பகுதிக்கு தினசரி 6 முறை அரசு பேருந்து இயக்கப்படுகிறது.
இப்பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ- மாணவியர், தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பெரும்பாலானோர் இந்த பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சாலையின் மோசமான நிலை காரணமாக பேருந்துகள் அடிக்கடி பழுதாகி வருகிறது.
சுண்ணாம்பு பாலம் பகுதியில் துவங்கி ஆரூற்றுப்பாறை வரை பல இடங்களில் சாலையில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த சாலைகளில் தினசரி பேருந்துகளை இயக்கி பயணிகளை ஏற்றிவருவது பெரும் சவாலாகவே உள்ளது. பேருந்துகளை முறையாக பராமரித்தாலும் சாலையில் உள்ள பள்ளங்களால் வாரத்தில் ஓரிரு நாட்கள் இதேபோல் பேருந்துகள் பழுதாகி நின்று விடுகின்றன.
நேற்று காலை 9 மணி அளவில் ஆரூற்றுப்பாறை பகுதியில் இருந்து பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களை ஏற்றிக்கொண்டு வந்த பேருந்து சுண்ணாம்பு பாலம் பகுதியில் பழுதாகி நின்றது. இதனால் பேருந்தில் வந்த பயணிகள் அங்கிருந்து இறங்கி பெரியசூண்டி வரை சுமார் 2 கி.மீ. தூரம் நடந்துவந்து அங்கிருந்து வேறு பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்களில் கூடலூருக்கு வந்தனர்.
இது குறித்து இப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘‘கூடலூர் அரசு போக்குவரத்துக் கழக கிளையில் இருந்து இப்பகுதிக்கு இயக்கப்படும் பேருந்து அதிக அளவிலான வருமானத்தை ஈட்டித்தரும் பேருந்தாக உள்ளது.
ஆரூற்றுப்பாறை பகுதிக்கு செல்லும் சாலை கடந்த பல வருடங்களாக பராமரிப்பின்றி காணப்படுவதால் சாலையில் பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டு போக்குவரத்திற்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்ககோரி தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், மாவட்ட நிர்வாகத்திற்கு மனுக்கள் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மழை காலத்துக்கு முன்பாக சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் தற்போது மழைக்காலம் துவங்கியுள்ளதால் சாலை மேலும் பழுதடைந்து வருகிறது. பாரதிநகர் பகுதியில் மேடான சாலை மிகவும் மோசமாக பழுதடைந்து உள்ளதால் தனியார் வாகனங்களை கூட இயக்க முடியாது நிலையில் உள்ளது. பாரதிநகர் வழியாக ஆரூற்று பாறைக்கு இயக்கப்பட்டு வந்த அரசுப் பேருந்து தற்போது பாரதி நகர் செல்லாமல் வேறு வழியாக சுற்றி செல்கிறது.
மாற்றுப் பாதையிலும் பல இடங்களில் பள்ளங்கள் உள்ளதால் பேருந்தை இயக்குவது சிரமமாகவே உள்ளது. எனவே பேருந்து முறையாக இயங்கும் வகையிலும், இப்பகுதி பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டும் சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.