பூம்புகாரில் கடலுக்கு அடியில் கட்டடங்கள்?.. பண்டைய தமிழர்களின் வரலாறு குறித்து ஆழ்கடலில் தொல்லியல்துறை 7வது நாளாக ஆய்வு!!
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் கடலில் பண்டைய தமிழர்களின் வரலாறு குறித்து கடல்சார் ஆய்வு ஆலோசகர் பேராசிரியர் ராஜன் தலைமையில் தொல்லியல் துறையினர் 8 பேர் உட்பட 20 பேர் கடலில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகார் மூவேந்தர் காலம் சங்க இலக்கியம் மற்றும் காப்பியங்களின் மூலம் மிகப்பெரிய கடல் வணிக துறைமுகமாக அறியப்படுகிறது. காவேரிபூம்பட்டினமாக இருந்த பூம்புகாரில் பண்டைய தமிழர்களின் நாகரீகத்தின் தொன்மையை ஆராயும் விதமாக இந்திய கடல்சார் பல்கலைக்கழக உதவியுடன் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் ஒருவாரமாக ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நிலையில் கடலுக்கு அடியில் தொல்லியல் துறை கல்வி, கடல்சார் ஆய்வு ஆலோசகர் பேராசிரியர் ராஜன் தலைமையில் தமிழ்நாடு தொல்லியல் துறை அலுவலர்கள் உட்பட 20 பேர் கொண்ட வல்லுநர் குழுவினர், கரையில் இருந்து 5.5 கி.மீ. தூரத்தில் 22 மீட்டர் ஆழத்தில், 7 நாட்களாக ஆய்வு பணிகளை மேற்கொண்டுள்ளனர். அந்த பகுதியில் தமிழர்களின் பழைய சுவடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வணிக நகரம் அமைந்ததற்கான கட்டிடங்கள் கடலுக்குள் இருப்பதை கண்டுபிடித்துள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் அளித்துள்ளன.