Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பொங்கல் தினத்தில் யுஜிசி நெட் தேர்வு நடத்தக்கூடாது: ஒன்றிய கல்வி அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாட்டில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் கொண்டாடும் ஜனவரி 13 முதல் 16ஆம் நாள் வரை யுஜிசி-நெட் தேர்வுகளை நடத்திட தேசியத் தேர்வு முகமையால் அறிவிக்கை கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்து ஒன்றிய கல்வி அமைச்சர் அவர்களின் உடனடி கவனத்திற்கு கொண்டுவந்து அத்தேர்வுகளை வேறொரு நாளில் மாற்றியமைக்க கோரி தமிழ்நாடு -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (7-1-2025) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், இந்த ஆண்டு தமிழ்நாட்டின் மிக முக்கியமான பண்டிகையான பொங்கல் பண்டிகை ஜனவரி 14 அன்று கொண்டாடப்படுகிறது என்றும் இந்தப் பண்டிகை தமிழ்நாட்டின் மிக முக்கியமான பண்டிகை என்றும், தமிழ்ச் சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினராலும் அறுவடைத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது என்றும் தமிழ்நாட்டின் உயர்கல்வித் துறை அமைச்சர் 23.12.2024 அன்று ஒன்றிய கல்வி அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டிய முதலமைச்சர் ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பண்டிகை ஜனவரி 13 முதல் ஜனவரி 16 வரை நான்கு நாட்கள் கொண்டாடப்படுவதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பொங்கல் பண்டிகையை அனைத்து தமிழ்ச் சமூகத்தினரும் நான்கு நாட்கள் உற்சாகமாக கொண்டாடுவர் என்றும் எனவே, இந்தப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2025 ஜனவரி 14 முதல் 17 வரை அரசு விடுமுறை நாட்களாக தமிழ்நாடு அரசால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் அறுவடைத் திருவிழாவாக கொண்டாடப்படும் பொங்கல், ஒரு பண்டிகையாக மட்டுமல்லாது ஏறக்குறைய 3000 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் காட்டுவதாகவும், இந்தப் பொங்கல் பண்டிகையைப் போலவே, ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் மகர சங்கராந்தி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது என்றும் தனது கடிதத்தில் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆகவே, திட்டமிட்டபடி பொங்கல் விடுமுறையில் யுஜிசி-நெட் தேர்வை நடத்தினால், ஏராளமான தேர்வர்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும் என்றும் இதே காரணத்திற்காக ஜனவரி 2025இல் நடைபெறவிருந்த பட்டயக் கணக்காளர்கள் தேர்வு ஏற்கனவே மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, யுஜிசி-நெட் தேர்வுகள் மற்றும் பிற தேர்வுகளை வேறொரு பொருத்தமான நாட்களில் மாற்றியமைக்க தேவை உள்ளது என்று தாம் கருதுவதாகவும், அறுவடைத் திருவிழா கொண்டாடப்படும் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களின் மாணவர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் தேர்வுகளுக்கு எளிதில் வர இயலும் என்றும் முந்தைய ஆண்டுகளில் பொங்கல் பண்டிகை காலங்களில் தேசிய தேர்வு முகமை யுஜிசி-நெட் தேர்வை நடத்தவில்லை என்று தரவுகள் காட்டுகிறது என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, இத்தகைய சூழ்நிலையில், யுஜிசி-நெட் தேர்வுகள் மற்றும் பிற தேர்வுகளை ஜனவரி 13 முதல் 16 வரையிலான நாட்களில் நடத்துவதைத் தவிர்த்து பொருத்தமான வேறு நாட்களுக்கு மாற்றியமைக்குமாறும் இதுகுறித்து ஒன்றிய கல்வி அமைச்சர் தலையிட்டு தமிழ்நாட்டில் மற்றும் L160 மாநிலங்களில் அறுவடைத் திருவிழா கொண்டாடப்படும் காலங்களில் யுஜிசி-நெட் தேர்வுகள் நடத்தும் திட்டத்தை மாற்றியமைக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.