புதுடெல்லி: தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியை தப்பிக்க வைக்க முயன்றதாக, சிலை கடத்தல் பிரிவு ஓய்வு பெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த விவகாரத்தில் பொன் மாணிக்கவேலுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி சிபிஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த மே மாதம் வழக்கு தொடரப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம்நாத் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ தரப்பில், பொன் மாணிக்கவேல் பாஸ்போர்ட்டை இதுவரை சரண்டர் செய்யவில்லை என்றும், நீதிமன்ற உத்தரவை மீறி தொடர்ந்து ஊடகங்களிலும் வழக்கு தொடர்பாக பேசி வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இதற்கு பொன் மாணிக்கவேல் தரப்பில், பாஸ்போர்ட் காலாவதி ஆகிவிட்டதால் புதுப்பிக்க விண்ணப்பித்துள்ளதாகவும், அது கிடைத்தவுடன் சரண்டர் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, பொன் மாணிக்கவேல் பாஸ்போர்ட் புதுப்பிக்க அனுமதி வழங்கினார். மேலும், வழக்கு தொடர்பாக பொன் மாணிக்கவேலும், விசாரணை அதிகாரியும் ஊடகங்களிடம் எதையும் பேசக்கூடாது என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.