Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிளாஸ்டிக், தெர்மாகோல் போன்ற பொருட்களால் ஆறுகள் மாசடைவதை தடுக்க ‘மிதவை தடுப்பான்: மாசு கட்டுப்பாட்டு வாரியம் திட்டம்

கோவை: பிளாஸ்டிக், மரக்கட்டை, தெர்மாகோல், தூக்கி வீசப்படும் பொருட்களால் ஆறுகள் மாசடைவதை தடுக்க ‘மிதவை தடுப்பான்’ திட்டம் கொண்டு வர மாசு கட்டுபாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் காவிரி, வைகை, பவானி, தாமிர பரணி, பாலாறு, தென்பெண்ணை ஆறு, நொய்யல், அமராவதி உள்ளிட்ட முக்கிய ஆறுகள் இருக்கிறது. அண்மைக்காலமாக ஆற்று நீரில் மிதக்கும் கழிவுகள் கலப்பது மிக அதிகமாகி வருகிறது. குறிப்பாக பிளாஸ்டிக், மரக்கட்டைகள், தெர்மா கோல், தூக்கி வீசப்படும் பல்வேறு தொழிற்சாலை கழிவுகள் ஆற்றில் மிதந்து செல்கிறது. பல இடங்களில் இந்த கழிவு பொருட்களால் நீர் நிலைகள் மாசடைந்து விடுகிறது. பிரதான ஆறுகளால் மாசு ஏற்படுவதால் அதை குடிநீருக்கு பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.

விவசாயத்திற்கு செல்லும் ஆற்று நீரும் பல்வேறு தொழிற்சாலை, சாயக்கழிவுகளால் அசுத்தமாகி வருகிறது. ஆற்றில் மிதக்கும் கழிவுகளை தடுக்க இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பாலம், தடுப்பணை என எதாவது பகுதியில் அடைப்பு ஏற்பட்டால் அதை அகற்ற முடியாமல் பொதுப்பணித்துறையினர் திணறி வருகிறார்கள். இதற்கு தீர்வு காணும் வகையில் தமிழக மாசு கட்டுபாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்கவுள்ளது. அதன்படி, ஆறுகளில் டிராஷ் பூம் என்ற இடை மறிப்பான் அமைக்கப்படும். மிதக்கும் கழிவுகளை மேலோட்டாக தடுக்க இந்த பூம் தடுப்பான் பயன்படுத்தப்படும்.

முதல் கட்டமாக இதனை ஒரு ஆற்றில் பைலட் திட்டமாக பயன்படுத்தி பார்த்து அதில் உள்ள நிறை குறைகளை ஆய்வு செய்து முழு அளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர தமிழக மாசு கட்டுபாட்டு வாரியம் முடிவு செய்திருக்கிறது. இது தொடர்பாக மாசு கட்டுபாட்டு வாரியத்தினர் கூறுகையில், ‘‘ஆற்றின் மீது நீரோட்டத்தில் மிதக்கும் தடுப்புகள் மீன் வலை போல் அமைக்கப்படும்.இந்த தடுப்பில் மிதக்கும் கழிவுகள் சிக்கும்.இந்த தடுப்பை தாண்டி அடுத்த பகுதிக்கு மிதக்கும் கழிவுகள் செல்லாது.இந்த கழிவுகளை சேகரித்து விரைவாக அகற்ற முடியும். கழிவுகள் அதிகமாக தேங்கியிருந்தாலும் பாதிப்பு ஏற்படுத்தாது.

நீர் தடையின்றி ஆற்றில் பாயும். இந்த தடுப்பான் அதிக மழை வெள்ளம்,சுழல் காலங்களில் எப்படி செயல்படும் என சோதித்து பார்க்க வேண்டியிருக்கிறது. இடை தடுப்பான்கள் அமைக்கும் திட்டம் நல்ல வரவேற்பு பெறும். முதல் கட்டமாக 4 கோடி ரூபாய் செலவில் 500 இடத்தில் ஆற்றின் மீது இந்த மிதவை தடுப்பான்கள் அமைக்கப்படவுள்ளது. மாநில அளவில் அனைத்து பிரதான ஆறுகளிலும் இந்த திட்டம் படிப்படியாக பயன்பாட்டிற்கு வர வாய்ப்புள்ளது’’ என்றனர்.