மணப்பாறை: பொள்ளாச்சியை சேர்ந்தவர்கள் சென்ற சுற்றுலா வேன் கவிழ்ந்து 5 பேர் காயமடைந்தனர். இதை கண்டித்து கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வடக்கிப்பாளையத்தில் இருந்து 22 பேர் வேனில் சுற்றுலாவுக்கு புறப்பட்டனர். அதே பகுதியை சேர்ந்த கோபால் (52) வேனை ஓட்டினார். பல்வேறு கோயில்களுக்கு சென்றுவிட்டு திருச்சி மாவட்டம் மணப்பாறை-துவரங்குறிச்சி சாலையில் புத்தாநத்தத்தை கடந்து வேன் இன்று காலை சென்றது. புத்துகுளம் பாலம் வளைவில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்தது. இதில் வேனிலிருந்த 5 பேர் காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் காயமடைந்த 5 பேரை மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புத்துகுளம் பாலம் வளைவு பகுதியில் தொடர்ந்து விபத்துகள் நடந்து வருகிறது. தொடர் விபத்தை தடுக்க வலியுறுத்தி புத்தாநத்தம், மெய்யம்பட்டி, கரும்சோலைபட்டி, மாலைக்காட்டுபட்டி, தோப்புப்பட்டி, முத்தனம்பட்டி, ஆலம்பட்டி, காடையம்பட்டி, மணியங்குறிச்சி, கருமலை, புதுப்பட்டி, இடையப்பட்டி, நல்லபொன்னம்பட்டி, அழககவுண்டம்பட்டி, கனவாய்பட்டி, புங்குனிபட்டி, பாறைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு புத்துகுளத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த தாசில்தார் செல்வம், புத்தாநத்தம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென கூறி மறியலை தொடர்ந்தனர். இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது புத்துகுளம் பகுதியில் விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனால் மக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.