பொள்ளாச்சி கலந்துரையாடல் கூட்டத்தில் பரபரப்பு எடப்பாடியுடன் விவசாயி கடும் வாக்குவாதம்: கள் இறக்குவது குறித்து பேச அனுமதி மறுத்து வெளியேற்ற முயற்சி
பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு நேற்று பிரசாரம் மேற்கொள்ள வந்த அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னதாக விவசாயிகள் மற்றும் பல்வேறு சங்கங்களுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்றார். இதில் கலந்து கொண்ட விவசாய சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் தங்கள் கருத்தை தெரிவித்ததுடன், அதுகுறித்து கோரிக்கை மனுவை எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்தனர்.
அதில் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேசும்போது, அதிமுக ஆட்சியின்போதே கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தேன். இப்போதும் தொடர்ந்து அந்த கோரிக்கையை வைத்து கொண்டிருக்கிறேன். ஆனால் எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளதாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அப்போது வேட்டைக்காரன்புதூரை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்ற விவசாயி எழுந்து, அதிமுக தேர்தல் அறிக்கையில் சேர்ப்பது தொடர்பான ஒரு கோரிக்கை மனுவை எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்தார்.
பின்னர் பேசுகையில், அதிமுக ஆட்சியின் போது நீரா பானத்துக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், கள் இறக்குவதற்கு மட்டும் ஏன் அனுமதி மறுக்கப்படுகின்றது என்று கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக விரிவாக பேச வேண்டும் என கூறினார். அப்போது மேடையிலிருந்த அதிமுக எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன், எஸ்.பி.வேலுமணி ‘‘நீங்கள் தெரிவித்துள்ள கருத்தைதான், ஏற்கனவே ஒரு விவசாயி தெரிவித்து விட்டார். நீங்கள் மனு கொடுத்தால் மட்டும் போதும். நீங்கள் பேசாமல் இருங்கள்’’ என கூறினார்.
இதற்கு அந்த விவசாயி பாலசுப்பிரமணியன், ‘‘என்னுடைய கருத்தை தெரிவிக்கத்தான் இங்கு வந்தேன். அப்படியென்றால் எதற்காக இந்த கலந்தாலோசனை கூட்டம். எனக்கு பேச வாய்ப்பு அளிக்க வேண்டும்’’ என்றனர். ஆனாலும், அந்த விவசாயிக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டு அந்த விவசாயியை அங்கிருந்து வெளியேற்ற முயற்சித்தனர். இதனால் விவசாயிக்கும், அதிமுகவினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நிலைமை மோசமடைவதை மேடையில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி அந்த விவசாயி பாலசுப்பிரமணியத்தை பார்த்து, ‘‘இது உங்கள் பிரச்னை மட்டும் கிடையாது.
முதல்ல புரிஞ்சிக்கோங்க.. இது தமிழ்நாடு... தனிப்பட்ட முறையில் எதையும் செய்ய முடியாது. உங்கள் கோரிக்கை மட்டும் வையுங்க... சொல்லறதை கேளுங்க.. 8 கோடி மக்கள் இருக்காங்க. கொஞ்சம் இருங்க. ஏங்க....சொன்னா புரிஞ்சிக்கோனும் முதல்ல... ஏப்பா கம்முன்னு இருப்பா... எல்லாரும் வந்திருக்காங்க. ஒவ்வொருத்தரும் ஒரு தொழில் பன்றாங்க...ஒரு அமைப்பு இருக்கு. கோரிக்கை சொல்லி இருக்காங்க. நீங்க அப்படி இருக்குது, அப்படி இருக்குதுன்னு சொன்னா பொதுவான இடத்தில் தவறாக பதிவாகும். சொல்லறதை புரிஞ்சிக்கோங்க......முதலமைச்சரோ எதிர்கட்சி தலைவரோ பொதுவாகத்தான் பேசனும். மக்களின் எண்ணங்களையும் பிரதிபலிக்கனும் மாதிரி இருக்கனும். உங்களுக்கு கஷ்டம் இருக்கும் இல்லைன்னு சொல்லலை. அதே போல மத்தவங்களை எந்த அளவுக்கு பாதிக்கும்னு பார்க்கனும். ஆக ஒரு பிரச்னைக்கு தீர்வு காண்பதாக இருந்தால் அனைவருடைய மனசும் புன்படாம இருக்கணும்’’ என கூறினார். எடப்பாடியை நோக்கி விவசாயி கேள்வி கேட்டதால் கலந்தாலோசனை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அவசர அவசரமாக கூட்டம் முடிக்கப்பட்டது.
* ‘தவழ்ந்து முதல்வரான தவழ்புதல்வனே’ எடப்பாடியை கிண்டலடித்து பொள்ளாச்சியில் போஸ்டர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் நேற்று பிரசாரம் மேற்கொள்வதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில், ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் இளைஞர் பொது நல மன்றம் என்ற பெயரில் ஒட்டப்பட்ட போஸ்டரில், தவழ்ந்து முதல்வரான தவழ்புதல்வனே வருக, சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம் படித்து வளர்ந்த மேதையே வருக, ஏற்றி விட்ட ஏணியை எல்லாம் உருத்தெரியாமல் ஆக்கிய உத்தமரே வருக, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் இறந்ததை டிவியில் பார்த்து தெரிந்து கொண்ட முன்னாள் முதல்வரே வருக என கிண்டலடித்து வாசகங்கள் இடம்பெற்று இருந்தது.
* தொண்டர்களால் அகற்றப்படுவாய்... எடப்பாடிக்கு பட்டை நாமம் போட்டு போஸ்டர்
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் அதிமுகவின் ஒன்றிணைப்புக்கு தடையாக இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பரபரப்பு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், ‘தொண்டர்களின் எண்ணங்களை நிறைவேற்ற ஒன்றிணைவோம்-வெற்றி பெறுவோம், ஒன்றிணைய வேண்டும்- 2026ல், அதிமுக ஆட்சியமைக்க வேண்டும். கழக வெற்றி கனவை நிறைவேற்றுவோம். எடப்பாடி பழனிசாமி ஒன்றிணைய சம்மதிக்காவிட்டால் தொண்டர்களால் அகற்றப்படுவாய்’ அதிமுக- ஸ்ரீவைகுண்டம்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் எடப்பாடி பழனிசாமிக்கு பட்டை நாமம் போட்டு, கையில் தட்டு ஏந்தியவாறு படம் போட்டுள்ளனர். இப்போஸ்டர் ஸ்ரீவைகுண்டம் தொகுதியிலும், சமூக வலை தளங்களிலும் வைரலாகி வருகிறது.
* அன்று ஆம்புலன்ஸ்: இன்று அரசு பஸ்; அதிமுகவினர் மோதல்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசார பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், வேலூர் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்ட போது 108 ஆம்புலன்ஸ் ஒன்று சென்றது. நோயாளி இல்லாமல் ஒவ்வொரு கூட்டத்திலும் வெறும் வாகனத்தை வேண்டுமென்றே ஓட்டிக்கொண்டு வருவதாகவும், மீண்டும் ஆம்புலன்ஸ் வந்தால், அதை ஓட்டி வருபவர் நோயாளியாக அதே ஆம்புலன்சில் அனுப்பப்படுவார்கள் என்றார். தொடர்ந்து, திருச்சி மாவட்டத்தில் நடந்த பிரசாரத்தின் போது, அங்கு ஆம்புலன்ஸ் வந்தபோது அதில் இருந்த டிரைவர் மற்றும் பெண் உதவியாரை அதிமுகவினர் தாக்கினர்.
இதன் பிறகு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீது தாக்குதல் நடத்துபவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதனால் ஆம்புலன்ஸ் மீது தாக்குதல் நடத்துவது என்பது கட்டுக்குள் வந்துள்ளது.
தற்போது ஆம்புலன்ஸ்க்கு பதிலாக அரசு பஸ்களை அதிமுகவினர் குறிவைத்துள்ளனர். கோவையில் 2ம் கட்ட பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி நேற்றுமுன்தினம் தொண்டாமுத்தூர் பகுதியில் ரோடுஷோ சென்றார். அங்கு கூட்டம் இல்லாததால் எடப்பாடி அப்செட் ஆனார். அதன்பிறகு குனியமுத்தூர் பகுதிக்கு பிரசாரத்திற்கு சென்றார்.
கேரள மாநிலம் செல்லும் பிரதான சாலையான பாலக்காடு சாலையில் பிரசாரம் மேற்கொண்டார். முன்னதாக அவ்வழியாக வந்த அரசு பஸ் செல்ல முடியாமல் அதிமுகவினர் வழிமறித்து நின்றனர். நடத்துனர் விசில் அடித்தபடி பஸ் செல்ல வழிவிடும்படி கேட்டார். அப்போது அதிமுகவினர் பஸ் நடத்துனரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உள்ளே இருந்த பயணிகள் சத்தம் போடவே வேறுவழியின்றி அதிமுகவினர் பஸ் செல்ல வழிவிட்டனர். தொடக்கத்தில் ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் மோதி வந்த அதிமுகவினர் தற்போது அரசு பஸ்கள் மீது மோத தொடங்கி இருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.