உடுமலை: பொள்ளாச்சி வாக்குவாதம் எதிரொலியாக உடுமலையில் நேற்று விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை எடப்பாடி பழனிசாமி திடீரென ரத்து செய்தார். ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதன்படி, 4வது கட்ட சுற்றுப்பயணத்தை கோவை மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி துவக்கினார்.
தொண்டாமுத்தூர், சுந்தராபுரம் ஆகிய இடங்களில் பேசினார். நேற்று முன்தினம் ஆனைமலை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் பேசிவிட்டு, இரவு திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் திறந்த வேனில் இருந்தபடி பேசினார். பின்னர் காந்திநகரில் உள்ள வீட்டில் தங்கினார். நேற்று காலை 10 மணிக்கு உடுமலை ஐஸ்வர்யா நகரில் உள்ள ஐஎம்ஏ ஹாலில், விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் தொழில் அமைப்பினருடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் இந்த நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் காலை பொள்ளாச்சியில் விவசாயிகள் மற்றும் தொழில் அமைப்பினருடன் கலந்துரையாடினார். அப்போது, கள் இயக்கத்தை சேர்ந்த விவசாயி, அதிமுக 10 ஆண்டுகால ஆட்சியின்போது கள்ளுக்கு அனுமதி வழங்காதது ஏன் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயியை கட்சியினர் வெளியேற்றினர். உடுமலையிலும் தென்னை விவசாயிகள் அதிகம் உள்ளதால், அதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்கவே கலந்துரையாடல் நிகழ்வை ரத்து செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று எடப்பாடி பழனிசாமி தங்கியிருந்த வீட்டுக்கு சென்ற சில விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் அவரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
* எடப்பாடியை கண்டித்து தென் மாவட்டங்களில் போஸ்டர்
மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் தேவரின் பெயர் சூட்ட வேண்டுமென சமீபத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் பேசியிருந்தார். அவரது இந்த பேச்சு தென்மாவட்டத்தைச் சேர்ந்த இதர சமூகத்தினரிடையே பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சு இரு சமூகத்தினரிடையே பிரிவினையை தூண்டி, அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் எடப்பாடியை கண்டித்து மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் குறிப்பிட்ட சமூகத்தினர் தரப்பில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், ‘‘மதுரை விமான நிலையம் குறித்து இரு சமூகத்தினர் இடையே பிரிவினையை தூண்டி அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசி அரசியல் ஆதாயம் தேடும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை வன்மையாக கண்டிக்கிறோம்’’ என கூறியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவுநாள் நேற்று நடந்த நிலையில் எடப்பாடிக்கு எதிராக பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.