*உற்பத்தி அதிகரிப்பால் விலை சரிகிறது
பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள தென்னைகளில் உற்பத்தியாகும் பச்சை நிற இளநீர் மற்றும் செவ்விளநீர், ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் வரும்போது, சென்னை, மதுரை, திண்டுக்கல், கடலூர், தூத்துக்குடி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு வெளி மாவட்டங்களுக்கும், ஆந்திரா மற்றும் கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
இதில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவால், செப்டம்பர் துவக்கம் முதல் அக்டோபர் மாதம் இரண்டாம் வாரம் வரை மழை குறைந்து அடிக்கடி வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இதனால் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் இருந்து லாரி மற்றும் டெம்போக்கள் மூலம் வெளி மாவட்டங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் இளநீர் குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது அதிகமாக இருந்தது.
சென்னை, கடலூர், தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் அச்சமயத்தில் பொள்ளாச்சியில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு மட்டுமின்றி, ஆந்திரா மாநிலத்திற்கும் இளநீர் அனுப்புவது குறைந்தது. இருப்பினும், மகாராஷ்டிரா, டெல்லி, உள்ளிட்ட பகுதிகளுக்கு கனரக வாகனங்களில் விற்பனைக்காக அனுப்பப்பட்டன.
இந்நிலையில் தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், மழை குறைவால், சில வாரத்திற்கு பிறகு பொள்ளாச்சியில் இருந்து லாரி மற்றும் டெம்போ உள்ளிட்ட கனரக வாகனங்கள் மூலம் செவ்விளநீர் மற்றும் பச்சை நிற இறநீர் உள்ளிட்டவைகளை அனுப்பி வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
மேலும் தென்னையில் இருந்து பறிக்கப்படும் இளநீரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால், அதனை வாங்க தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் நேரடியாக வந்து, குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்து வாங்கி செல்வதை தொடர்ந்துள்ளனர். நேற்றைய நிலவரப்படி பண்ணை விலையாக ஒரு இளநீர் ரூ.29க்கு விற்பனையானது என விவசாயிகள் தெரிவித்தனர்.

