நெல்லை: நெல்லையில் சபாநாயகர் அப்பாவு நேற்று அளித்த பேட்டி: கரூர் சம்பவத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கருணை உள்ளம் கொண்டவர் என்பதை நிரூபித்துள்ளார். பாதிப்பு சம்பவம் கேள்விப்பட்டவுடன் நள்ளிரவு 1 மணிக்கும் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். உடனடியாக நிவாரணம் அறிவித்தார். ஆனால் இதுபோன்ற கொடூர சம்பவத்திற்கு காரணமான விஜய் இரவோடு இரவாக பனையூருக்கு சென்று பதுங்கிக் கொண்டார். தலைவனாக இருந்தால் நெஞ்சில் உறுதி வேண்டும். ஈவு-இரக்கம் இருக்க வேண்டும். அது இல்லாமல் விஜய் யாருக்கு வந்த விதியோ என்று சென்றுவிட்டார்.
அமித்ஷாவும், புஸ்ஸி ஆனந்தும் நண்பர்கள். அவரது ஆலோசனையின் படியே இந்த கட்சியை விஜய் ஆரம்பித்தார். தற்போது கரூரில் கூட்டம் நடந்தபோது அதில் பங்கேற்க வந்த விஜய், அந்த கட்சியின் நிர்வாகிகள் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனாவுடன் சேர்ந்து ஒன்றரை மணி நேரம் ஆலோசனையில் ஈடுபட்டு, வேண்டுமென்றே தாமதமாக பிரசார இடத்திற்கு வந்தது தான் இதுபோன்ற விபத்துக்கு காரணம். பகலில் பிரசாரத்திற்கு அனுமதி கேட்டுவிட்டு, எதற்காக மின்விளக்கு எல்லாம் அந்த இடத்தில் பொருத்தினார்கள்?.
அவர்கள் 3 பேரும் ஒரு சதியோடுதான் அந்த இடத்திற்கு வந்துள்ளனர். இதுவரை சினிமாவில் மட்டுமே நடித்துக் கொண்டிருந்த விஜய், தற்போது அரசியலிலும் நடிக்க தொடங்கியுள்ளார். இதற்காக அவர் அமித்ஷாவோடு ஒப்பந்தம் போட்டுக் கொண்டுள்ளார். கரூர் சம்பவத்தில் அப்பாவி மக்கள் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். எங்களுக்கு யாருடனும் ரகசிய உறவு கிடையாது. இந்த அரசு யாருக்கும் அச்சப்படாத அரசு. யாரையும் தப்ப விடாது. இவ்வாறு அவர் கூறினார்.