‘குட்டிக்கரணம் போடுகிறார்’ எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் அரசியலில் டிடிவி ஜெயிக்க முடியாது: ஆர்பி உதயகுமார் சாபம்
மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசியலில் தான் பிடித்த முயலுக்கு 3 கால் டிடிவி.தினகரன் பேசி வருகிறார். அதிமுகவால் பதவி பெற்று உயர்ந்தோம் என்பதை மறந்து தினகரன், அதிமுகவை அழித்து விடுவேன்; ஒழித்து விடுவேன் எனப் பேசி குட்டிக்கரணம் போட்டு பார்க்கிறார். அவர் என்ன வேலை செய்தாலும் இனி தமிழகத்தில் இடமில்லை என மக்கள் முடிவெடுத்து விட்டனர். அதிமுக கூட்டணி பற்றி, அரைவேக்காட்டு அண்ணன் தினகரன் ஏதேதோ பேசி திருப்தி அடைகிறார். பிள்ளை போல வளர்த்த ஜெயலலிதாவுக்கு, டிடிவி தினகரன் துரோகம் இழைத்தார்.
எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் அரசியல் வாழ்வில் டிடிவி வெற்றி பெற முடியாது. 2026 தேர்தலோடு டிடிவி அரசியல் வாழ்வுக்கு முடிவுரை எழுதப்படும். கடல் வற்றினால் கருவாடு தின்னலாம் என காத்திருக்கும் கொக்கு போல காத்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமி குறித்து டிடிவி தினகரன் பேசுவதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டோம். அவரை விமர்சனம் செய்வதை டிடிவி நிறுத்தி கொள்ள வேண்டும். கட்சியிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டவர். அவரின் கருத்துக்கு பதில் கருத்து சொல்லத் தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
