Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிளவுவாத - வகுப்புவாத சக்திகளுக்கு அரசியல் ஆதாயம் தேடும் வகையில் தரம் தாழ்ந்து பேசி வரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

சென்னை:பிளவுவாத - வகுப்புவாத சக்திகளுக்கு அரசியல் ஆதாயம் தேடும் வகையில் தரம் தாழ்ந்து பேசி வரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், தமிழ்நாட்டின் தனித்துவப் பண்புகளுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் தேச விரோத சிந்தனைகளும், பயங்கரவாத போக்குகளும் நிலவுகின்றன என புனைவு செய்தியை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, சிறு, குறு நடுத்தரத் தொழில்களில் வட மாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்து வந்த லட்ச கணக்கான தொழிலாளர்களுக்கு, தமிழ்நாடு வேலைவாய்ப்பு வழங்கி, கண்ணியமான வாழ்க்கை சூழலை ஏற்படுத்தி கொடுத்திருக்கும் உண்மையை அவர் மறுத்துள்ளார்.

தமிழர்களுக்கு எதிராக வெளி மாநிலத் தொழிலாளர்களை, குறிப்பாக பிகார் தொழிலாளர்களையும் தமிழக மக்களுக்கு எதிராக நிறுத்தும் பேராபத்தான செயலில் ஆளுநர் ஈடுபட்டிருப்பதை அவரது நேர்காணல் வெளிப்படுத்துகிறது. மேலும், தமிழ் மொழியின் தொன்மை சிறப்பை சிறுமைப்படுத்தும் கருத்துகளை ஆளுநர் முன் வைக்கிறார். தமிழ்நாட்டில் எல்லைகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மொழிச் சிறுபான்மை மக்களின் தாய்மொழியில் பாடநூல்கள் தயாரித்து வழங்கி, அவர்களது தாய் மொழியில் பயின்று வருவதையும் கோவை, திருப்பூர், ஈரோடு, பெருந்துறை, ஓசூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட தொழில் நகரங்களிலும், தமிழகத்தின் உட்கிராமங்களிலும் வட மாநிலத் தொழிலாளர்கள் அச்சமின்றி, பாதுகாப்பு உணர்வோடு, அவர்களது சொந்த தாய் மொழியில் பேசி வருவதையும், அவர்களது வசதிக்காக பிற மொழிகளில் வணிகப் பொருட்கள் பட்டியல் தரப்பட்டுள்ளதையும் ஆளுநர் இது நாள் வரை அறிந்து கொள்ளாமல் இருப்பது வரலாற்றுத் துயரமாகும்.

உயர்தனி மொழியாம் செம்மொழியான தமிழ் மொழி, பிற மொழிகள் எதனையும் எதிரி மொழிகளாக கருதும் பண்பு கொண்டதல்ல; எல்லா மொழிகளிடத்தும் தோழமை உறவு கொண்டு வளர்ச்சிக் கூறுகளை உள்வாங்கியும், ஒவ்வாததை விலக்கியும், கால வளர்ச்சிக்கு தக்கபடி, தமிழ் மொழி தன்னை தகவமைத்துக் கொள்ளும் அறிவியல் ஆற்றல் பெற்றிருப்பதை அறியாமல் இருப்பது, அவரது அறிவு சூன்யத்தை காட்டுகிறது. தமிழ்நாடு சட்ட பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல், உயர்கல்வி வளர்ச்சிக்கு ஊறு விளைவித்த சட்டவிரோத செயலை மறந்து விட்டு, வகுப்புவாத சக்திகளின் மூர்க்கத்தனமான செயல்களுக்கு இடமளிக்காத தமிழ்நாட்டின் சுயமரியாதை, சமதர்ம, பகுத்தறிவு சக்திகளின் மரபு சார்ந்த வலிமையை சகித்துக் கொள்ள இயலாத ஆளுநர், தமிழ் மொழி மீது வெறுப்பை உமிழ்ந்து வருகிறார்.

சமூக அமைதியை சீர்குலைத்து, மோதலை உருவாக்கி, பிளவுவாத, வகுப்புவாத சக்திகளுக்கு அரசியல் ஆதாயம் தேடும் வகையில் ஆளுநர் தரம் தாழ்ந்து பேசி வருவதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.