அரசியல் ஆதாயத்துக்காக நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் தடுப்பது நல்லதல்ல: ஒன்றிய அமைச்சர் அமித் ஷா பேச்சு
புதுடெல்லி: அகில இந்திய சபாநாயகர்கள் மாநாடு டெல்லியில் நேற்று நடந்தது. 2 நாள் நடக்கும் மாநாட்டை தொடங்கி வைத்து ஒன்றிய அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றங்கள் விவாதங்களுக்கான இடங்கள். ஆனால் குறுகிய அரசியல் ஆதாயத்திற்காக எதிர்க்கட்சிகள் அவற்றை செயல்பட விடாமல் தடுப்பது நல்லதல்ல. நாடாளுமன்றத்தில் குறைந்த அளவிலான விவாதங்கள் நடக்கும்போது, தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அவையின் பங்களிப்பு பாதிக்கப்படும்.
ஜனநாயகத்தில் விவாதம் நடைபெற வேண்டும். ஆனால், ஒருவரின் குறுகிய அரசியல் ஆதாயத்திற்காக எதிர்க்கட்சி என்ற பெயரில் அவை செயல்பட அனுமதிக்கப்படாவிட்டால் அது நல்லதல்ல. எதிர்க்கட்சி என்ற பெயரில், சபையை தினமும் அல்லது ஒவ்வொரு கூட்டத்தொடரையும் செயல்பட அனுமதிக்காவிட்டால் அது நல்ல செயல் அல்ல. நாட்டு மக்களும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் அதைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்றார்.