Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

அரசியல் பேச எத்தனையோ வாய்ப்பு இருக்கிறது பேரிடரிலுமா அரசியல் செய்ய வேண்டும்? எடப்பாடிக்கு அமைச்சர் கேள்வி

சென்னை: கரூர் சம்பவத்தில் தமிழ்நாடே துயரத்தில் இருக்க, பொறுப்புள்ள எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிலும் அரசியல் செய்து கொண்டிருக்கிறார். பேரிடரிலுமா செய்ய வேண்டும்? என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: முந்தைய கூட்டங்களின் நிலையை ஆய்வு செய்து, அதற்கேற்ப முழு பாதுகாப்பை அரசு, காவல்துறை தந்திருக்க வேண்டும் என்கிறார் பழனிசாமி.

முந்தைய கூட்டங்களிலிருந்து ஆய்வு செய்த பிறகுதான் அதற்கு ஏற்ப கூடுதல் கட்டுப்பாடுகளையும் நிபந்தனைகளையும் காவல் துறை போட்டது. உடனே நீதிமன்றத்திற்குச் சென்று தவெகவினர் முறையிட்டார்கள். விஜய் பிரசாரத்திற்கு வருபவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க அரசு எப்படியெல்லாம் முயன்றது என இதில் இருந்தே பழனிசாமி தெரிந்து கொள்ளலாம். கூட்டத்துக்குள் ஆம்புலன்ஸ் வேண்டு மென்றே வருகிறது என்று அதை தாக்கும் கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்தவரே எடப்பாடி பழனிசாமிதான்.

காவல்துறை விதித்த நிபந்தனைகளைக் கடைப்பிடிக்காத காரணத்தால் ஏற்பட்ட துரதிர்ஷ்டமான சம்பவம் இது. சம்பவம் நடந்த உடனேயே முதலமைச்சர் துரிதமாகக் களத்தில் இறங்கி நடவடிக்கை மேற்கொண்டார். அனுமதி தராவிட்டால் அதிலும் அரசியல் செய்வது, அனுமதி அளித்தால் அந்த நிபந்தனைகளை மீறுவது, நிபந்தனைகளை மீறும் ரசிகர்களை ஊக்குவிப்பது என தவெக மோசமான அரசியலுக்கு மாறி வருகிறது. அதனை அதிமுக ஆதரிக்கிறது.

நகருக்கு வெளியே பிரசாரத்தை வைத்துக் கொள்ளுங்கள் என்று காவல்துறை கேட்டுக் கொண்டால், முடியாது நாங்கள் கூட்டத்தைக் காட்டுவதற்கு முட்டுச் சந்துதான் தேவை என்று அப்பாவி பொதுமக்களை அலைக்கழிப்பதுதான் பழனிசாமி போன்றவர்களின் கேவலமான அரசியலாக இருக்கிறது.

ஆளுங்கட்சியின் மீது பழி போடவும் அரசியல் செய்யவும் எந்தக் காரணமும் இல்லை என்றால் மக்களுடன் நின்று மக்களுக்குத் தேவையானதைச் செய்து கொடுத்து நல்ல அரசியலைச் செய்யுங்கள். அதை விடுத்து இதுபோன்ற மோசமான நாடகங்களை அரங்கேற்றி அவற்றுக்கு ஆளுங்கட்சியின் மீது பழி போட்டு அரசியல் செய்வது மனசாட்சியே கிஞ்சித்தும் இல்லாதவர்கள் செய்யும் செயல். பேரிடரிலுமா அரசியல் செய்ய வேண்டும்? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.