‘உங்களை ஏன் நிரந்தரமாக நீக்கக்கூடாது..?’ 3 எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு ராமதாஸ் நோட்டீஸ்: விசாரணை குழு முன் ஆஜராவார்களா?
திண்டிவனம்: பாமகவில் இருந்து நீக்கப்பட்ட 3 எம்எல்ஏக்கள் மற்றும் வழக்கறிஞர் பாலு ஆகியோரிடம், உங்களை ஏன் நிரந்தரமாக நீக்கக்கூடாது என்று விளக்கம் கேட்டு ராமதாஸ் தனித்தனியாக நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், விசாரணை குழுவிடம் நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது.
பாமகவில் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இதனிடையே 10.5 சதவீத இடஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்து விழுப்புரத்தில் அன்புமணி தரப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பங்கேற்ற அக்கட்சியின் எம்எல்ஏக்களான சிவக்குமார் (மயிலம்), வெங்கடேஸ்வரன் (தர்மபுரி), சதாசிவம் (மேட்டூர்) ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் ெபாறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கி ராமதாஸ் உத்தரவிட்டார். இதேபோல் வழக்கறிஞர் பாலுவும் நீக்கப்பட்டார். ராமதாசின் அனுமதியுடன் இந்த உத்தரவை பாமக தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் வெளியிட்டு இருந்தார்.
இதனிடையே, பாமகவில் தலைமை நிலைய செயலாளருக்கு எங்களை நீக்குவதற்கான அதிகாரம் இல்லை என 3 எம்எல்ஏக்களும் போர்க்கொடி தூக்கினர். அன்புமணியை சந்தித்து பேசியபிறகு தங்களது நிலைப்பாட்டை தெரிவிப்போம் என்றனர். இதற்கிடையே அன்புமணியை தவறான பாதையில் தொடர்ந்து வழிநடத்துவது இவர்கள் 4 பேர் மட்டும்தான் என்று கருதியே ராமதாஸ் இந்த நடவடிக்கையை தடாலடியாக எடுத்து இருப்பதாக தைலாபுரம் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக 3 எம்எல்ஏக்களும், வழக்கறிஞர் பாலுவும் தனித்தனியாக நேரில் விசாரணை குழுவிடம் விளக்கம் அளிக்க பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. தைலாபுரம் தோட்டத்தில் இருந்து பாமக எம்எல்ஏக்களான மேட்டூர் சதாசிவம், தர்மபுரி வெங்கடேஸ்வரன், மயிலம் சிவக்குமார் மற்றும் வழக்கறிஞர் பாலு ஆகியோருக்கு தனித்தனியாக தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ள நோட்டீசில் உங்களை ஏன் நிரந்தரமாக நீக்கக்கூடாது என்பதற்கு 4 பேரும் கட்சியின் விசாரணை குழுவிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புமணியை கலந்தாலோசிக்காமல் அவர்கள் உரிய பதில் தரமாட்டார்கள் என்றே தெரிகிறது. அதேசமயம் 3 எம்எல்ஏக்கள் நீக்கம் தொடர்பான அறிவிப்புக்கு அன்புமணி எதுவும் பதில் அளிக்காதது பாமகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை குழுவில் ஆஜராகி விளக்கம் அளிக்காவிட்டால் அவர்களை கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்க தைலாபுரம் தோட்டம் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஒரே கட்சிக்கு 2 கொறடா
ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏவான சேலம் அருள் சட்டமன்ற பாமக கொறடாவாக முறைப்படி அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் உள்கட்சி பிரச்னையில் அருள் எம்எல்ஏவை நீக்கி அன்புமணி உத்தரவிட்டார். இதையடுத்து அவரது கொறடா பதவியை பறிப்பதாகவும், சிவக்குமாரை நியமிக்கக்கோரியும் அன்புமணி கொடுத்த கடிதத்தை அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேரும் சபாநாயகரிடம் கொடுத்துள்ளனர். இதனால் மயிலம் தொகுதி பாமக எம்எல்ஏ சிவக்குமாரும் தற்போது கொறடா என்று அறிவித்து செயல்பட்டு வருகிறார். இடஒதுக்கீடு ஆர்ப்பாட்ட பேனரிலும் சிவக்குமார் எம்எல்ஏவின் பெயருக்கு கீழ் கொறடா என்று போடப்பட்டிருந்தது. இதனால் ஒரே கட்சிக்கு 2 கொறடாவா என்று பாமக நிர்வாகிகள், தொண்டர்களிடம் குழப்பம் நீடிக்கிறது.