Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வாக்கு திருட்டு நடப்பதை தடுக்க டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிடுங்கள்: ராகுல் காந்தி வலியுறுத்தல்

புதுடெல்லி: வாக்கு திருட்டு நடப்பதை தடுக்க டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். கடந்த ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் மிகப்பெரிய மோசடி நடந்ததாக குற்றம்சாட்டி, மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி எழுதிய ‘மேட்ச் பிக்சிங் மகாராஷ்டிரா’ என்ற கட்டுரை கடந்த 7ம் தேதி ஆங்கில பத்திரிகையில் வெளியானது. அதில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து ராகுல் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், ராகுல் காந்தி நேற்று தனது எக்ஸ் பதிவில், ‘‘2024 மக்களவை தேர்தலுக்கும் மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலுக்கும் இடையே வெறும் 5 மாதங்களில், மகாராஷ்டிரா முதல்வரின் சொந்த தொகுதியில் (நாக்பூர் தென்மேற்கு) 8% வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். சில வாக்குச்சாவடிகளில் 20-50% வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தெரியாத நபர்கள் வாக்களித்ததாக பூத் ஏஜென்ட்கள் தெரிவித்தனர்.

சரியான முகவரி இல்லாத ஆயிரக்கணக்கான வாக்காளர்களை ஊடகங்கள் கண்டுபிடித்தன. ஆனால் தேர்தல் ஆணையம்? அமைதியாக அல்லது உடந்தையாக இருந்தது. இவை வெறும் தவறு மட்டுமல்ல, வாக்கு திருட்டு நடந்திருக்கிறது. அதனால்தான் டிஜிட்டல் வாக்காளர் பட்டியல்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்’’ என கூறி உள்ளார்.

தேர்தல்கள் சட்டப்படி நடக்கின்றன தேர்தல் ஆணையம் பதில்

ராகுல் காந்தியின் மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டு தொர்பாக கடந்த 12ம் தேதி தலைமை தேர்தல் ஆணையம் ராகுல் காந்திக்கு இமெயில் மூலம் பதிலளித்திருந்தது. அந்த பதிலில் தேர்தல் ஆணையம் கூறிய தகவல்கள் நேற்று வெளியாகின.

அதில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் நடக்கும் அனைத்து தேர்தல்களும் சட்டப்படியே நடக்கின்றன. மேலும், முழு தேர்தல் நடவடிக்கையிலும் அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட பூத் ஏஜென்டுகள் உட்பட ஆயிரக்கணக்கான பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். அவர்களின் கண் எதிரே அனைத்தும் நடக்கின்றன. மகாராஷ்டிரா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் 28,421 பூத் ஏஜென்டுகள் உட்பட தேசிய, மாநில கட்சிகள் என மொத்தம் 1 லட்சத்து 8,026 பூத் ஏஜென்டுகள் பணியில் இருந்தனர். இதுதவிர, 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பூத் அதிகாரிகள் கண்காணித்துள்ளனர்.

ஏற்கனவே தேர்தல் தொடர்பான பிரச்னை குறித்து காங்கிரஸ் வேட்பாளர்களால் உரிய நீதிமன்றத்தில் மனுக்கள் செய்யப்பட்டிருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம். தேர்தல் முடிவில் பிரச்னைகள் இருந்தால் முடிவு வெளியான 45 நாட்களில் அந்தந்த மாநிலத்தின் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் மனு தாக்கல் செய்ய முடியும். இதையும் தாண்டி உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், எங்களுக்கு கடிதம் எழுதி, நேரில் வரும்பட்சத்தில் அனைத்து பிரச்னைகள் குறித்தும் தேர்தல் ஆணையத்துடன் நேரில் விவாதிக்கலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.