Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதால் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதால் குரூப் 4 தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சமூகவலைதள பதிவில் கூறி இருப்பதாவது:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த 12.7.2025 அன்று நடந்த குரூப் 4 தேர்வு ஆரம்பிக்கும் முன்னரே, மதுரையில் வினாத்தாள் ஒரு தனியார் ஆம்னி பேருந்தில், முறையாக சீலிடப்படாமல், கதவின் மேல் ஒரு A4 ஷீட் ஒட்டப்பட்ட நிலையில் அனுப்பப்பட்டது சர்ச்சையானது. பிறகு, தேர்வு வினாத்தாளில் பல கேள்விகள், குறிப்பாக தமிழ் பாடக் கேள்விகள், பாடத்திட்டத்துக்கு அப்பாற்பட்டு இருந்ததாக பல்வேறு தேர்வர்கள் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில், தற்போது, சேலத்தில் இருந்து சென்னைக்கு அனுப்பப்பட்ட விடைத்தாள்கள் அடங்கிய பெட்டிகள் முறையாக சீலிடப்படாமல், ஆங்காங்கே உடைக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வருகின்றன. குரூப் 4 பதவிகள், குறிப்பாக விஏஓ பதவி என்பது தமிழ்நாடு அரசின் வேர் போன்றது. ஜாதி மத பேதமின்றி, ஏழை எளிய பின்னணி கொண்ட மக்கள் அரசு அதிகாரிகள் ஆகவேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட பதவி. பல லட்சம் மாணவர்களின் கனவாக இருக்கக் கூடிய குரூப் 4 தேர்வு என்பது, எவ்வளவு முறையாக நடத்தப்பட வேண்டியது?

ஆனால், மெத்தனப் போக்கின் உச்சத்தில் இந்த தேர்வை நடத்தி, தேர்வர்களின் வாழ்க்கையோடு விளையாடியுள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஜூலை 12 அன்று நடந்த குரூப் 4 தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்; உடனடியாக மறு தேர்வு வைக்க வேண்டும். குரூப் 4 குளறுபடிகள் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.