யுஜிசி பரிந்துரைப்படி கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்கி பணி நிரந்தரம்: தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்
சென்னை: யுஜிசி பரிந்துரைப்படி கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்கி, படிப்படியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ளஅறிக்கை: தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஒரு பாடவேளைக்கு ரூ. 1500 வீதம், மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ. 50 ஆயிரம் மதிப்பூதியம் வழங்கப்பட வேண்டும் என்று யுஜிசி ஆணையிட்டது. இதை தமிழக அரசு செயல்படுத்தாத நிலையில், கவுரவ விரிவுரையாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்த ஐகோர்ட் கிளை கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்நிலையில், யுஜிசி பரிந்துரைத்த ஊதியத்தை வழங்கிட வலியுறுத்தியும், படிப்படியாக கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்திட வலியுறுத்தியும், தற்போது ஒருவார காலமாக அந்தந்த கல்லூரிகளில் வகுப்புகளை புறக்கணிப்பு செய்து உள்ளிருப்பு போராட்டத்தை கவுரவ விரிவுரையாளர்கள் நடத்தி வருகின்றனர். ஆகவே, கவுரவ விரிவுரையாளர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைப்படி ஊதியத்தை உயர்த்தி அவர்களை படிப்படியாக பணி நிரந்தரம் செய்யும் துரித நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்.