தமிழகத்தின் கடன் சுமையை பற்றி பேசுகிறார்; ஒன்றிய அரசின் கடன் சுமை பற்றி பேச துணிவு உண்டா? எடப்பாடிக்கு செல்வப்பெருந்தகை கேள்வி
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தின் கடன்சுமை அதிகரித்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். 2011ல் அதிமுக ஆட்சி அமைந்தபோது, திமுக ஆட்சி வைத்த கடன் ஒரு லட்சம் கோடி ரூபாய். ஆனால் 2021ல் ஆட்சியை விட்டு அதிமுக விலகுகின்ற பொது வைத்திருந்த கடன் ரூ.5.7 லட்சம் கோடி. 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் பெற்ற கடன் ரூ.4.18 லட்சம் கோடி.
தமிழகத்தின் கடன் சுமையை பற்றி பேசுகிற எடப்பாடி பழனிசாமி ஒன்றிய பாஜ அரசின் கடன் சுமையை பற்றி பேச துணிவு இருக்கிறதா? 2014ல் ஒன்றிய காங்கிரஸ் கூட்டணி அரசு வைத்துச்சென்ற கடன் ரூ.55 லட்சம் கோடி. ஆனால் 2025ல் ஒன்றிய பாஜ அரசின் கடன் ரூ.185 லட்சம் கோடி. 1947 முதல் 2014 வரை 67 ஆண்டுகளில் ஒன்றிய அரசின் கடன் ரூ.55 லட்சம் கோடிதான். ஆனால் 2014 முதல் 2025 வரை 11 ஆண்டுகளில் ரூ.130 லட்சம் கோடி பாஜ அரசு கடன் வைத்திருக்கிறது. இதை விமர்சனம் செய்யாமல் பாஜவுக்கு ஜால்றா அடிப்பது ஏன்?
எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி அமலாக்கத்துறை, வருமானவரித் துறையின் பிடியில் இருக்கிற வரை அமித்ஷாவின் பிடியில் இருந்து அதிமுக மீள முடியாது. அதனால் தான் தற்கொலைக்கு சமமான முடிவை அதிமுக எடுத்திருக்கிறது. எனவே எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணங்களில் மக்கள் முன்னால் நீலிக்கண்ணீர் வடிப்பதை எவரும் நம்பவும் மாட்டார்கள், ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள்.