இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலின் போது 5 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதைத் தொடர்ந்து, மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், ‘டிரம்ப் பேச்சு குறித்து பிரதமர் மோடி தெளிவுபடுத்த வேண்டும். உண்மையை அறிய நாட்டிற்கு உரிமை உண்டு. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் சாதித்து வருகிறார்.
கடந்த 70 நாட்களாக இந்தியா-பாகிஸ்தான் மோதல் குறித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கருத்துகள் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் தெளிவான மற்றும் திட்டவட்டமான அறிக்கையை வழங்க வேண்டும். மோடிஜி, ஐந்து ஜெட் விமானங்களைப் பற்றிய உண்மை என்ன? நாட்டிற்குத் தெரிந்துகொள்ள உரிமை உண்டு’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மக்களவையில் காங்கிரஸ் கட்சி கொறடாவான மாணிக்கம் தாகூர் கூறுகையில்,’வர்த்தக அழுத்தத்தைப் பயன்படுத்தி அணு ஆயுத மோதலைத் தடுப்பதாக டிரம்ப் பெருமை பேசுகிறார். பாகிஸ்தான் அவரைப் பாராட்டுகிறது. அவர்கள் நோபல் பரிசைக் கூட முன்மொழிந்துள்ளனர். அப்படியானால் உண்மையில் என்ன நடந்தது? மோடி ஏன் மவுன விரத மனநிலையில் இருக்கிறார்? 5 போர் விமானங்கள் உண்மையிலேயே சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தால், டிரம்ப் சொல்வது போல், நாடு தெரிந்து கொள்ள வேண்டியது இதுதான்: பழிவாங்கலை அங்கீகரித்தது யார்? அமெரிக்கா என்ன பங்கு வகித்தது? வெளிநாட்டு அழுத்தத்திற்கு இந்தியா அடிபணிந்ததா? மவுனம் என்பது அதிகாரப்பூர்வ பதிலாக இருக்க முடியாது’ என்று அவர் கூறினார்.