சிதம்பரம்: தமிழ்நாடு ஓரணியில் இருப்பதால் டெல்லியின் காவி திட்டம் இங்கு பலிக்காது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். சிதம்பரத்தில் நேற்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ெதாடங்கி வைத்து, சிதம்பரம் பிரம்மராயர் கோயில் அருகே நடைபெற்ற பிரமாண்ட கூட்டத்தில் பேசினார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: எதிர்காலத்திற்கான கட்டமைப்புகளை வலுப்படுத்தும் அதேநேரத்தில் நிகழ்காலத்தில் நாம் நெஞ்சை நிமிர்த்தி நடைபோட கடந்த காலத்தில் தமிழ் சமுதாயத்தின் விடியலுக்கும், உயர்வுக்கும் உழைத்த மாமனிதர்களை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில்தான் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒளிவிளக்காக, நெறிசார்ந்த அரசியலின் அடையாளமாக விளங்கிய பெரியவர் எல்.இளையபெருமாளின் நூற்றாண்டு நினைவு அரங்கத்தை திறந்து வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மகிழ்ச்சி என்று சொல்வதைவிட பெருமை அடைகிறேன் என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்த மேடையில் பெரியாரின் வழி வந்த திராவிட இயக்கத் தலைவர்கள், மார்க்சிய சிந்தனையை கொண்டிருக்கக் கூடிய பொதுவுடைமை இயக்க தலைவர்கள், காந்திய வழியில் வந்திருக்கக் கூடிய தேசிய இயக்க தலைவர்கள், அம்பேத்கர் இயக்க தலைவர்கள் என எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறோம். இதுதான் ஓரணியில் தமிழ்நாடு. அதைத்தான் திருமாவளவன் இங்கே பெருமையோடு குறிப்பிட்டுச் சொன்னார். நானும் அதை வழி மொழிகிறேன். உறுதியோடு சொல்கிறேன். தமிழ்நாடு இப்படி ஓரணியில் இருக்கும்போது, எந்த டெல்லி அணியின் காவித் திட்டமும் இங்கு பலிக்காது, பலிக்காது.
இளையபெருமாளின் பணிகளை சிறப்பிக்க இந்த கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் அவருக்கு நூற்றாண்டு நினைவரங்கம் அமைக்கப்படும் என்று தமிழக சட்டமன்றத்தில் 2023ம் ஆண்டு 110 விதியை பயன்படுத்தி நான் அறிவித்தேன். இது ஏதோ இளையபெருமாளுக்கு புகழ் சேர்க்க மட்டும் என்று நினைத்துவிடாதீர்கள். இது திராவிட மாடல் அரசு. அவருக்கு செலுத்துகின்ற நன்றிக்கடன். இப்படிப்பட்ட அடையாளங்களால், குறியீடுகளால், நினைவுச் சின்னங்களால் மட்டுமல்ல உண்மையான சமூகநீதி அரசாக ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக செயலிலும் பல சாதனைகளை செய்திருக்கிறோம். பட்டியல் பெரிதாக இருக்கிறது, சொல்வதற்கு நேரம்தான் இல்லை. ஆனால் நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறேன், உறுதியாக சொல்கிறேன்.தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே திராவிட மாடல் அரசில்தான் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்கு அதிகமான திட்டங்களை தந்திருக்கிறோம். ஆனால் இந்த திட்டங்கள் மட்டும் போதுமா? என்று கேட்டால் போதாது. சுயமரியாதை சமதர்ம சமூகத்தை உருவாக்க நாம் இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும். அதையும் திராவிட மாடல் அரசு தொடர்ந்து செய்து வருகிறது. இப்படித்தான் காலனி என்ற சொல்லை அரசு ஆவணங்களில் இருந்து நீக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களின் சாதிப் பெயரில் இறுதி எழுத்து ன் என முடியாமல் ர் விகுதியோடு மரியாதையாக இருக்க வேண்டுமென்று பிரதமரிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். அதற்காக தொடர்ந்து போராடுவோம். சாதி அடையாளத்துடன் இருந்த பள்ளி, கல்லூரி விடுதிகளை இனி சமூகநீதி விடுதிகள் என்று மாற்றியிருக்கிறோம். நமது செயல்கள் மூலம் இன்றைக்கு, நாளைக்கே எல்லாம் மாறிவிடும் என்று நான் சொல்ல வரவில்லை. சமூக விடுதலைப் பயணம் என்பது நீண்ட நெடிய பயணம். அதற்கு காலம் பிடிக்கும். ஆனால் எல்லாம் மாறும். நிச்சயம் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மாற்றுவேன். அதற்காக திராவிட மாடல் அரசு சமூக விடுதலைக்கு தன்னுடைய பங்களிப்பை எப்போதும் உறுதியாக செலுத்தும். அதற்கு பெரியவர் இளையபெருமாள் போன்ற தலைவர்களின் வாழ்வும், பணியும் நமக்கு வழிகாட்டட்டும். இளையபெருமாள் புகழ் வாழ்க, வாழ்க. இவ்வாறு அவர் பேசினார்.
கடலூரில் காலணி தொழில் பூங்கா
விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில் கடலூர் குறிஞ்சிப்பாடி மற்றும் பண்ருட்டி பகுதிகளில் வாழும் மகளிருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் குறிஞ்சிப்பாடி அருகில் இருக்கும் கொடுக்கன்பாளையத்தில் 150 ஏக்கர் பரப்பளவில் தோல் அல்லாத காலணி மற்றும் காலணிகளுக்கான உதிரிபாகங்கள் உற்பத்திக்கான பெரும் தொழில் பூங்கா அமைக்கப்படும். சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில், ரூ.75 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள இந்த தொழில் பூங்காவில் சுமார் 12 ஆயிரம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இப்படி ஒடுக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மகளிர், மாணவர், விவசாயிகள் என்று எல்லோருக்கும் எல்லாம் வழங்கி என்றும் உங்களுடன் இந்த ஸ்டாலின் நிற்பேன், நிற்பேன் என்று அறிவித்தார்.