Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாணவர்களின் நலன் கருதி தேசிய அளவில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: நீட் தேர்வை ரத்து செய்திட வலியுறுத்தி நேற்று சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை இணைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதம் வருமாறு: நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கவும், 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளவும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பான சட்ட முன்வடிவு குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்ட போதிலும், இதுநாள் வரையில் அக்கோப்பு நிலுவையில் உள்ளது.

சமீபத்தில் நடந்த நீட் தேர்வு முறைகேடுகள், நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டின் நிலைப்பாட்டினை உறுதிப்படுத்தியுள்ளது. பல மாநிலங்களும் இந்த தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து தங்களது கருத்துகளை தெரிவிக்க தொடங்கியுள்ளது. இதைகருத்தில் கொண்டு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நேற்று நீட் தேர்வு முறையை ரத்து செய்திட ஒன்றிய அரசை வலியுறுத்தி ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்களிப்பதற்கான சட்டமுன்வடிவிற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்கவேண்டும். தேசிய அளவில் நீட் தேர்வு முறையைக் கைவிடும் வகையில் தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் உரிய திருத்தங்களை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் நகலை தனது கடிதத்துடன் இணைத்து அனுப்பி உள்ளேன். இந்த விஷயத்தில் பிரதமர் மோடி விரைந்து தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.