Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை: ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவித்திட வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நேற்று முன்தினம் (23ம் தேதி) எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் 22-7-2024 அன்று IND-TN-10-MM-2517 மற்றும் IND-TN-10-MM-284 பதிவு எண்கள் கொண்ட மீன்பிடி படகுகளில் மீன்பிடிக்க சென்றிருந்த நிலையில், அவர்களும், அவர்களது மீன்பிடி படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் தற்போது ஜூலை 22ம் தேதி வரை மட்டும் 250 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளில், ஒரு ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மிக அதிகபட்ச எண்ணிக்கை இது என கவலையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மீனவர்கள் இதுபோன்று அச்சுறுத்தப்படுவதும், கைது செய்யப்படுவதும் மற்றும் அவர்களது மீன்பிடி படகுகள், கருவிகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து தடையின்றி நடைபெற்று வருகிறது. இதனால் மீனவ மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே, இந்த நிலைமையை தணித்திட உரிய தூதரக முயற்சிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து இலங்கையில் இருந்து 87 மீனவர்களையும், 175 படகுகளையும் விரைவாக விடுவித்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.