தன்னுடைய மகனின் அரசியல் வாழ்க்கைக்காக என் மீது துரோகி பழி சுமத்தியுள்ளார் வைகோ: மல்லை சத்யா பரபரப்பு அறிக்கை
சென்னை: தனது மகனின் அரசியல் வாழ்க்கைக்காக, என் மீது அபாண்டமாக துரோகி பழி சுமத்தியுள்ளார் வைகோ, என்று மல்லை சத்யா கூறியுள்ளார்.
மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா நேற்று வெளியிட்ட அறிக்கை:
மதிமுகவில் தொடர்ந்து இயங்க வேண்டும் என்ற உணர்வுடனே இதுநாள் வரை இருந்து வந்துள்ளேன். ஆனால் கட்சியில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைக்கு நிச்சயமாக நான் காரணம் இல்லை. கடந்த மாதம் 9ம் தேதி வைகோவின் பேட்டியில் தமிழீழ தாயக தலைவர் பிரபாகரனுக்கு புலிப்படை வீரன் மாத்தையா துரோகம் செய்ததை போன்று எனக்கு மல்லை சத்யா துரோகம் செய்து விட்டார் என்று வைகோ ஒப்பிட்டு பேசினார். வைகோ தன் மகன் துரை எம்பியின் அரசியலுக்காக என் மீது அபாண்டமாக துரோகி பழி சுமத்தப்பட்டதில் இருந்து என்னால் தூங்க முடியவில்லை. அரசியல் பொது வாழ்க்கையை வீழ்த்துவதற்கு உயர்ந்த உலகம் போற்றும் வைகோ, வேறு ஏதாவது ஒரு குற்றச்சாட்டை சொல்லி இருக்கலாம் அல்லது ஒரு பாட்டில் விஷம் வாங்கி கொடுத்து குடிக்க சொல்லி இருந்தால் குடித்து செத்து போய் இருப்பேன்.
வைகோவின் அறம் சார்ந்த என் அரசியல் பொதுவாழ்வை உங்கள் மகனுக்காக வீழ்த்துவதற்கு துரோகம் என்ற வார்த்தை தானா தங்களுக்கு கிடைத்தது. இனி எக்காலத்திலும் யார் மீதும், எந்த தொண்டன் மீதும் இதுபோன்ற அபாண்டமான பழியை சுமத்தி பழிக்கு ஆளாக வேண்டாம். அரசியலில் நீங்கள் அடைந்து இருக்கும் உங்கள் உயரத்திற்கு அது அழகல்ல. கடந்த 3 ஆண்டுகளாக சுயமரியாதை இழந்து ஒரு சிலரால் கடும் நிந்தனைக்கும் அவதூறுக்கும் ஆளாகி வந்திருக்கின்றேன்.
இந்த சோதனையான காலகட்டத்தை கடந்து வருவேன். கடந்த 4 நாட்களாக நான் எதுவும் பேசாமல் மவுனம் காத்து வந்தேன். காரணம் நான் மதிமுகவின் துணை பொதுச் செயலாளராக இப்போது வரையில் கடமை கண்ணியம் கட்டுப்பாடு காத்து வந்துள்ளேன். இந்தநிலையில், என்மீது மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, பொதுவெளியில் விமர்சித்து பேசியுள்ளார். பதில் சொல்ல வேண்டிய ஜனநாயக கடமை எனக்கு உண்டு. இந்த இக்கட்டான காலகட்டத்தில் நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் ஆறுதல் கூறியவர்களுக்கு நன்றி கூறுகின்றேன். என்றும் மறுமலர்ச்சி பாதையில். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உளவுத்துறை மாற்றியமைக்கப்படுமா?
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சிறப்பாக பணியாற்றத்தான் டிஎஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டள்ளனர். ஆனால் சட்டம் ஒழுங்கு போலீசார் சிறப்பாக செயல்படாவிட்டாலும், உளவுத்துறை போலீசாரும் இந்த தவறுக்கு காரணமாக உள்ளனர். இதனால் உளவுத்துறையையும் சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் காலம்காலமாக ஒரே துறையில் பணியாற்றும் சிலர் அரசியவாதிகள் குறிப்பாக ஆளும் கட்சி அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் குறைகளை கண்டறிந்து அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படுவதால் ஒரு கட்டத்தில் அரசியல்வாதிகளை மிரட்டும் நிலைக்கு அவர்கள் சென்று விடுகின்றனர். இதனால் சட்டம் ஒழுங்கை கண்காணிப்பது, ரவுடிகளை கண்காணிப்பதில் கோட்டை விட்டு விடுகின்றனர். இதனால் உளவுத்துறையையும் டிஜிபி மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது என்கின்றனர் சட்டம் ஒழங்கு போலீசார்.