Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாமக பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்ட அன்புமணி தலைவர் பதவிக்காலம் மே 28ம் தேதியுடன் முடிந்தது: ராமதாஸ் உற்சாகம்

தந்தை, மகன் மோதலால் பாமக இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கட்சியில் யாருக்கு அதிகாரம் என்ற நிலையை நிறுவனர் ராமதாசும், மற்றொரு பக்கம் தலைவர் அன்புமணியும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனிடையே கட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட அன்புமணியின் பதவிக்காலம் முடிந்து விட்டதாக ராமதாஸ் ஆதரவாளர்கள் பரபரப்பு தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

கடந்த 2022 மே 28ம் தேதி பொதுக்குழு கூட்டத்தில் பாமக தலைவராக நியமிக்கப்பட்ட அன்புமணியின் 3 ஆண்டு பதவிக்காலம் கடந்த மே 28ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. இதனையடுத்து ஆடிட்டர் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். அப்போது கட்சி தலைவர் பதவி காலாவதியான பிறகு தானாகவே அதிகாரம் அனைத்தும் நிறுவனரான ராமதாசின் கைகளுக்கு வந்துவிட்டதாக தெரிவித்தார்களாம். மேலும் இனிமேல் பொதுக்குழுவை கூட்டித்தான் புதிய தலைவரை தேர்வு செய்து முறைப்படி தேர்தல் கமிஷனுக்கு அறிவிக்க ேவண்டும் என்றும் ஆலோசனை வழங்கி உள்ளனர்.

அதன்பிறகு நிறுவனரான தனக்கு தான் கட்சியின் அனைத்து அதிகாரமும் உள்ளது என்று உற்சாகம் அடைந்துள்ள ராமதாஸ் அதிரடியாக கட்சி நிர்வாகிகளை நீக்கியும் புதிய நிர்வாகிகளை நியமித்தும் வருகிறார்.

இதுகுறித்து அக்கட்சி வட்டாரங்கள் கூறுகையில்,

‘ஒவ்வொரு கட்சிக்கும் தலைவர், பொதுச்செயலாளர் என்று சட்ட விதிகள் மாறுபடும். ஆனால், பாமகவில் கட்சியை தொடங்கிய நிறுவனருக்கு தான் அனைத்து உரிமைகளும், அதிகாரமும் உண்டு. தலைவர் நியமனம் முதல் நிறுவனருக்கு தான் உரிமை உள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால் பொதுக்குழு தான் இந்த நிறுவனர், தலைவர் பதவியை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் இருப்பதால் ராமதாசும், அன்புமணியும் தனது ஆதரவாளரை மாறி, மாறி நியமித்து வருகின்றனர். விரைவில் பொதுக்குழு கூட்டி ராமதாஸ் புதிய நிர்வாகிகளை அறிவிக்கப் போவதாக கூறிய நிலையில் அன்புமணியோ சென்னையில் தனது ஆதரவாளர்களை கூட்டி தன்னை மீண்டும் தலைவராக காய் நகர்த்தி வருகிறார்’ என்றனர்.

கட்சியை விட்டு வெளியே சென்றவர்களை சேர்க்க திட்டம்

பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த காலங்களில் கட்சியிலிருந்து வெளியே சென்ற மூத்த நிர்வாகிகளை மீண்டும் பாமகவில் இணைத்து கட்சியை பலப்படுத்தவும், அன்புமணிக்கு பதிலடி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி பாமகவில் காடுவெட்டி குருவுக்கு அடுத்தபடியாக கட்சியை சிறப்பாக வழி நடத்திய வேல்முருகன் தனியாக கட்சி தொடங்கி செயல்படுத்தி வருகிறார். அவரை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வந்து முக்கிய பதவி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல்களும் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அடுத்த கட்ட காய் நகர்த்தலிலும் ராமதாஸ் வட்டாரத்தில் ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

ராமதாசுக்கே அதிகாரம் வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி உறுதி

தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாசை வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, பாமக கவுரவ தலைவர் ஜி.கே மணி, முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்னுசாமி, முன்னாள் எம்.எல்.ஏ திருக்கச்சூர் ஆறுமுகம், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் ம.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் நேற்று சந்தித்து பேசினர். ராமதாசை சந்தித்த பின் பேட்டியளித்த வன்னியர் சங்க தலைவர் புதா.அருள்மொழி கூறுகையில், ‘அன்புமணி தானே பாமகவின் தலைவர், ராமதாஸ் வழிகாட்டி என கூறுவது வரவேற்கதக்கது. ஆனால், அப்படியே நடத்திட்டு வந்தா நல்லா இருக்கும். அன்புமணி செயல் தலைவர், பாமகவின் தலைவராக ராமதாஸ் செயல்படுவதாக ஏற்கனவே ராமதாஸ் அறிவித்து விட்டார் ஆனாலும் விடாமல் தன்னை தான் தலைவர் என்று அன்புமணி சொல்லி வருகிறார். வன்னியர் சங்கத்தை பொறுத்தவரை ராமதாஸ் தான் எங்களுக்கு தலைவர். பாமகவில் உச்ச பட்ச அதிகாரம் ராமதாசுக்கு தான் உள்ளது. பொதுக்குழு கூட்டுவது தொடர்பாக இதுவரை பேசவில்லை. பொதுக்குழுவை ராமதாஸ் விரைவில் கூட்டுவார்’ என்றார்.

பொதுக்குழுவை கூட்டினால் மீண்டும் தலைவராவாரா?

பொதுக்குழுவை கூட்டுவதற்கு பொதுக்குழு நிர்வாகிகளுக்கு கட்சியின் நிறுவனர் அழைப்பு விடுக்க வேண்டும். பாமக பொதுக்குழு கூடுமா என்று ராமதாசிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது இதுகுறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று தெரிவித்தார். பாமகவில் உச்சபட்ச அதிகாரம் நிறுவனருக்கே உள்ளது என்று வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா.அருள்மொழி தெரிவித்துள்ளார்.

அதன்படி பாமகவில் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் நிறுவனரின் உத்தரவுக்கே அதிக அதிகாரம் உள்ளதாக பாமக விதிகளில் உள்ளதாகவும், இதை ராமதாஸ் அப்படியே வைத்துள்ளதாகவும், இதனால் தான் இதுபோன்று புதிய நிர்வாகிகளை அவர் நியமிக்க காரணம் என்றும், முகுந்தன் நியமனம் செல்லாது என அப்போது பொதுக்கூட்டத்தில் அன்புமணி தெரிவிக்கவில்லை என்றும் பாமக வட்டாரம் கூறுகின்றது. மேலும் கடந்த ஏப்ரல் 10ம் தேதி பாமக செயல் தலைவராக அன்புமணி அறிவிக்கப்பட்ட போதும் தேர்தல் ஆணையத்தில் தலைவராக அன்புமணியே உள்ளார். அதன்படி தேர்தல் ஆணையத்தில் தலைவரை மாற்ற ராமதாஸ் பொதுக்குழுவை கூட்டி பெரும்பான்மையை நிரூபித்தாக வேண்டும். இருந்த போதிலும் பெரும்பாலான நிர்வாகிகள் அன்புமணி வசமே உள்ளதால் தற்போது பொதுக்குழு கூடினாலும் அன்புமணி தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார். இதனை மாற்றவே புதிய நிர்வாகிகளை ராமதாஸ் நியமித்து வருவதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தந்தை-மகன் பிரச்னையால் மனஉளைச்சல், உடல்நலக்குறைவு: பாமக எம்எல்ஏ திடீர் அட்மிட்

தந்தை-மகன் பிரச்னையால் கடந்த 30ம் தேதி, திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாசை, சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் சந்தித்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யப் போவதாக கூறினார். பின்னர் வெளியே வந்த அவர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என்று ராமதாஸ் கூறிவிட்டதாக தெரிவித்தார். மேலும் பாமக நிர்வாகிகளை நீக்க ராமதாசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் பேட்டியளித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை, திடீரென அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவர் சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து, 2வது நாளாக நேற்றும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து கேட்ட போது, அருள் எம்எல்ஏ கூறுகையில், ‘கடந்த சில நாட்களாக கட்சிக்குள் நடக்கிற செயல்களால் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். நேற்று முன்தினம் காலை, ரத்த அழுத்தம் அதிகமானதால் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதற்காக மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை ெபற்று வருகிறேன். தற்போது ஓரளவுக்கு உடல்நிலை சீராக இருக்கிறது. இருந்தாலும் டாக்டர்கள் தொடர் சிகிச்சையில் இருக்க அறிவுறுத்தியுள்ளனர். உடல்நிலை பாதிப்பு காரணமாக சென்னையில் நடக்கும் அன்புமணி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. நான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்த ராமதாஸ், அன்புமணி ஆகிய இருவரும் செல்போனில் என்னிடம் நலம் விசாரித்தனர்,’ என்றார்.