Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புதிய குற்றவியல் சட்டத்தில் மருத்துவர்களுக்கான தண்டனை பிரிவை உடனே நீக்க வேண்டும்: ஒன்றிய உள்துறை அமைச்சருக்கு கலாநிதி வீராசாமி எம்பி கடிதம்

சென்னை: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசு பாரதிய நியாய சன்ஹிதா என்ற புதிய தண்டனை சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த புதிய சட்டத்தின் 106வது பிரிவின்படி எவரேனும் கவனக்குறைவாக அல்லது அவசரமாக செய்யும் செயல், ஒருவது உயிரிழப்பிற்கு காரணமானால் அவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் வழங்கப்படும் எனவும், இதுபோன்ற கவனக்குறைவான முறையில் மருத்துவ சிகிச்சை அளிக்கும் பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களின் செயலால், நோயாளிகளுக்கு உயிரிழப்பு ஏற்பட்டால், அந்த மருத்துவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபதாரம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டு தேசிய மருத்துவ கமிஷன் சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள மருத்துவர்களுக்கு இந்த சட்டத்தின்படி சிறை தண்டனை வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே வழக்கத்தில் இருந்த இந்திய தண்டனை சட்ட பிரிவு 304ன் படி மருத்துவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் என குறிப்பிட்டப்பட்டிருந்தது. இதன் மூலம் மருத்துவர்கள், சிகிச்சையின் போது செய்யும் கவனக்குறைவான செயல்களுக்கு அதே தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.

இதுதொடர்பாக, நாடாளுமன்றத்தில் நீங்கள் பேசியபோது, மருத்துவர் சிகிச்சை வழங்கும் போது ஏற்படும் மரணம் என்பது கொலை என்று சொல்ல முடியாது என்று கூறியதை உங்களுக்கு நினைவுறுத்துகின்றேன். அப்போது நீங்கள் வழங்கிய உறுதிக்கு மாறாக கூறப்பட்டுள்ளது எந்த வகையில் நியாயம்? கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டபோது தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கிய போது, எத்தனை மருத்துவர்கள் தங்கள் இன்னுயிரை இழந்தனர் என்பதை உங்கள் அரசு மறந்து விட்டதா அல்லது அந்த மருத்துவர்களுக்கு அவர்கள் வழங்கும் சிகிச்சையின் போது எதிர்பாராத விதமாக சில நிகழ்வுகள் ஏற்படும்போது அதற்கு அவர்களைப் பொறுப்பாக்கி இத்தண்டனைச் சட்டத்தின் மூலம் சிறை தண்டனை வழங்குவது தான் உங்கள் நோக்கமா?

இந்திய மருத்துவர்கள் சங்கம் சுமார் 4 லட்சம் உறுப்பினர்களை கொண்டது. இது, ஏற்கனவே இந்தச் சட்டத்திற்கு தனது எதிர்ப்பினை தெரிவித்துள்ளது. மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கும் மருத்துவரின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டுடிருக்கும் அரிவாளாக இந்தச் சட்டம் அமைந்துள்ளது. இந்த தண்டனை சட்டப்பிரிவு மருத்துவ சேவை வழங்குவதில் உள்ள இடர்பாடுகளை கருத்தில் கொள்ளாமல் மருத்துவம் என்னும் தொழிலின் மருத்துவம் அறியாமல், நோயாளிகளுக்காக ஓய்வின்றி தன்னை அறியாமல் நோயாளிகளுக்காக தொண்டாற்றும் மருத்துவர்களின் அருஞ்செயல்களைப் புரிந்து கொள்ளாமல் உருவாக்கப்பட்டுள்ளது. மருத்துவ சேவை வழங்கும்போது அறியாமல் ஏற்படும் தவறுகள் குற்றச் செயல்கள் என்று சொல்லுவது தவறாகும் என்பதை புரிந்து கொண்டு இந்த சட்டப்பிரிவை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.