நாடாளுமன்றத்தில் புதிய வருகை பதிவு; பிரதமர், அமைச்சர்களுக்கு விலக்கு அளிக்கப்படுவது ஏன்..? காங்கிரஸ் கேள்வி
புதுடெல்லி: வரும் 21ம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இருந்து எம்பிக்கள் நாடாளுமன்றத்தின் நுழைவாயில் வளாகத்தில் தங்கள் வருகையை பதிவு செய்வதற்கு பதிலாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையிலேயே டிஜிட்டல் முறையில் வருகையை பதிவு செய்யும் புதிய நடைமுறை கொண்டு வரப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகைப் பதிவில் அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் கையொப்பமிட வேண்டிய அவசியமில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து மக்களவை காங்கிரஸ் கொறடா மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பதிவில், ‘‘வக்பு மசோதா வாக்கெடுப்பின் போது இதுபோன்ற மல்டி மீடியா சாதனம் தோல்வி அடைந்ததை பார்த்தோம். அது நம்பகத்தன்மையுடன் செயல்படவில்லை. எனவே குறைபாடுள்ள முறையை ஏன் மீண்டும் கொண்டு வர வேண்டும். எம்பிக்கள் சிலர் நுழைவாயிலிலேயே வருகையை பதிவிட்டு விட்டு அவை நடவடிக்கைகளில் பங்கேற்காமல் செல்வதால், அவர்களின் இருக்கையிலேயே டிஜிட்டல் வருகை பதிவு கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த பொறுப்பு கூறலில் இருந்து பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு விலக்கு அளிக்கப்படுவது ஏன்? எதற்கும் பிரதமர் முன்மாதிரியாக இருக்க வேண்டாமா? பிரதமர் உண்மையிலேயே எத்தனை நாள் அவைக்கு வருகிறார். 18 முதல் 28 நாட்கள் அவை நடந்தால் 3 அல்லது 4 நாட்கள் மட்டுமே வருவார். எனவே டிஜிட்டல் வருகைபதிவு கொண்டு வருவதற்கு பதிலாக அமைப்பில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும். கட்டாய வருகையை அனைவருக்கும் பொதுவாக்க வேண்டும்’’ என கூறி உள்ளார்.