திருச்சி: திருச்சி எம்.பியும், மதிமுக முதன்மை செயலாளருமான துரை வைகோ திருச்சி விமான நிலையத்தில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக மதிமுக விளங்குகிறது என்பதை எடுத்துரைக்கும் வகையில் செப்டம்பரில் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு திருச்சியில் நடைபெற உள்ளது. வைகோவை, ‘பொய்கோ’ என வைகைசெல்வன் பேசியது அவருடைய தனிப்பட்ட கருத்து. அரசியல் இயக்கங்களில் தவறுகள் நடப்பது இயல்புதான். அதிமுகவுடன் கூட்டணி வைத்தது தவறானது என்பதை வைகோ வெளிப்படையாக கூறியுள்ளார்.
அதற்காக அதிமுக தீண்ட கூடாத கட்சி அல்ல. எம்ஜிஆரையோ, ஜெயலலிதாவையோ அவர் இழிவுபடுத்தி எதுவும் கருத்து கூறவில்லை. மல்லை சத்யா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சியின் தலைமை தான் முடிவு எடுக்கும். மதிமுகவில் இன்னும் சிலர் ஒதுங்கி இருக்கிறார்கள். தலைமைக்கு துரோகம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களும் வேறு சில இயக்கங்களில் இணையலாம். அது அவர்களின் உரிமை. கட்சிக்கு துரோகம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தலைவர் தான் முடிவு எடுப்பார்.
வைகோ கோபப்படுவதால் அவர் இழந்தது தான் அதிகம். கோபப்பட்டாலும் அவர் நல்ல மனிதர். பொடா சட்டம் வந்த பொழுது வைகோ அதை ஏற்றுக்கொள்ள கூடாது என நாடாளுமன்றத்தில் பேசினார். பொடாவில் பத்திரிக்கை துறையினரையும் கைது செய்யலாம் என இருந்தது. அதை மட்டுமாவது நீக்க வேண்டும் என பேசியவர் வைகோ. பத்திரிக்கையாளர்களுக்காக முதலில் நிற்கும் நபர் வைகோ. தமிழகத்திற்கு தேவையான இயக்கம் மதிமுக. கூட்டணியில் 12 இடங்கள் வேண்டும் என மதிமுக எங்கும் கேட்கவில்லை, எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து கூட்டணி தலைமையுடன் பேசி தேர்தல் நேரத்தில் தலைவர் முடிவெடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.