Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மு.க.முத்து மரணம் கட்சி தலைவர்கள் இரங்கல்

சென்னை: கலைஞர்-பத்மாவதி தம்பதியின் மூத்த மகன் மு.க.முத்து, உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலை காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக): அன்பு சகோதரர் மு.க.முத்துவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): தமிழ்நாட்டின் கலையுலகிலும் அரசியல் வரலாற்றிலும் தனக்கென தனி இடம் பதித்தவர் மு.க.முத்து. தந்தையின் அரசியல் பாரம்பரியத்தையும், சமூக அக்கறையையும் தொடர்ந்து அவர் எடுத்து சென்றதோடு, திரைப்படங்களின் மூலமாகவும், பொதுவாழ்வின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

வைகோ (மதிமுக): கலைத்துறையில் நாட்டம் கொண்ட மு.க.முத்து, தேர்தல் களத்தில் சிறப்பாக பிரசாரம் செய்து திமுக வளர்ச்சிக்கு பெரிதும் துணை நின்றார். சிறந்த நடிகராகவும், பாடகராகவும் முத்திரை பதித்தவர்

பெ.சண்முகம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): கலைஞரின் மூத்த மகனான மு.க.முத்து உடல்நலக் குறைவால் மறைவுற்ற செய்தி வேதனையளிக்கிறது. மு.க.முத்து கலைத்துறையிலும், அரசியல் துறையிலும் சிறந்து விளங்கியவர். தனது இனிமையான குரலில் சிறந்த சமூக நல்லிணக்க பாடல்களையும் பாடியவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து மறைந்த செய்தி அறிந்து, அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தோம். கலைஞரின் அரசியல் பணிக்கு பக்கபலமாக திகழ்ந்தவர். திரையுலகில் அறிமுகமாகி முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்தார். அவரது இளவலும், இன்றைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் வளர்ச்சி கண்டு மகிழ்வும், பெருமிதமும் அடைந்தவர். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

எல்.முருகன் (பாஜ): மு.க.முத்துவின் பிரிவால் வாடுகின்ற அவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

நயினார் நாகேந்திரன் (பாஜ): மு.க.முத்துவை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

ஓ.பன்னீர்செல்வம்: பூக்காரி, அணையா விளக்கு, பிள்ளையோ பிள்ளை, சமையல்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த பெருமைக்குரியவர் மு.க.முத்து. மிக சிறந்த பாடகர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. இவர் பாடிய ‘நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா’ என்ற பாடல் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றது.

ஜவாஹிருல்லா (மமக): தந்தையை போல திரைத்துறையில் தடம் பதித்தவர். அவரை பிரிந்து வாடும் முதல்வர் உள்ளிட்ட உறவினர்களுக்கும் திமுக தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புமணி (பாமக): கலைஞரின் மூத்த புதல்வரும் திரைப்பட நடிகருமான மு.க.முத்து காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தம் அடைந்தேன்.

ஜி.கே.வாசன் (தமாகா): கலைஞரின் மூத்த மகனும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மூத்த சகோதரருமான மு.க.முத்து உடல்நிலைக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். மு.க.முத்து தனது தந்தையை போல் திரைத்துறையில் தடம்பதித்து தனக்கென ஓர் இடம்பிடித்தவர். திரைத்துறையில் கதாநாயகனாக, பாடகராக விளங்கி மக்களின் மனதில் இடம் பிடித்தவர். எல்லோரிடமும் அன்போடு பழகுபவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரேமலதா (தேமுதிக): கலைஞரின் மூத்த மகன் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் தேமுதிக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

டிடிவி.தினகரன் (அமமுக): கலைஞரின் மூத்த மகனும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மூத்த சகோதரருமான மு.க.முத்து உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எய்திய செய்தி வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

எர்ணாவூர் நாராயணன் (சமத்துவ மக்கள் கழகம்): திரைத்துறையில் தனது சொந்த குரலில் பல்வேறு பாடல்களில் பாடி புகழ்பெற்றவர். வயது மூப்பு காரணமாக உடல்நிலை குறைவால் காலமானார். அவரது மறைவு திமுக மற்றும் திரையுலகத்திற்கு பெரும் இழப்பாகும்.

இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர்: கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து மறைவு செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அரசியலில் முகம் காட்டாவிட்டாலும் கூட நெருக்கமானவர்களுக்கு அகமும், முகமுமாய் இருந்து பழகியவர். அவரது மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் மட்டுமல்லாது இஸ்லாமிய சமூகத்தினர் அனைவருக்கும் பேரிழப்பாகும். அவரது ஆன்மா அமைதியின் நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.