புதுடெல்லி: சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(எஸ்சிஓ) வௌியுறவு அமைச்சர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஒன்றிய வௌியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கலந்து கொண்டார். கூட்டத்துக்கு முன்பாக நேற்று காலை எஸ்சிஓ அமைச்சர்கள் அனைவரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினர். 2020ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பிறகு முதன்முறையாக சீன அதிபர் ஜி ஜின் பிங்குடன் ஒன்றிய வௌியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சந்தித்து பேசி உள்ளார்.
இந்த சந்திப்பு தொடர்பான அமைச்சரின் விளக்கம் குறித்து காங்கிரஸ் கடுமையாக சாடி உள்ளது. இதுகுறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தன் எக்ஸ் பதிவில், “சீன வௌியுறவு அமைச்சர் இந்தியா வந்து பிரதமர் மோடியை சந்தித்து இந்தியா சீனா உறவுகளில் தற்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் பற்றி விளக்கம் அளிப்பார் என நினைக்கிறேன். இந்திய வௌியுறவு கொள்கையை அழிக்கும் நோக்கில் அமைச்சர் ஜெய்சங்கர் ஒரு மிகப்பெரிய சர்க்கசை நடத்தி வருகிறார்” என காட்டமாக தெரிவித்துள்ளார்.