திருவாரூர்: அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரசார பயணத்தை ஒவ்வொரு மாவட்டமாக மேற்கொண்டு வருகிறார். நேற்று காலை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் விவசாய சங்கங்கள், மீனவநல கூட்டமைப்புகள், அனைத்து வர்த்தக சங்கங்கள், கட்டிட பொறியாளர் சங்கத்தினர், கட்டிட தொழிலாளர் சங்கத்தினர், அனைத்து ஓட்டுநர் சங்கங்களின் நிர்வாகிகளுடன் எடப்பாடி கலந்துரையாடினார். தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி வரும் வழியில் விவசாய வயலில் களை எடுத்துக் கொண்டிருந்த பெண் விவசாய தொழிலாளர்களிடம் அவர்களது கோரிக்கைகள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி கேட்டறிந்தார்.
பின்னர் கொல்லுமாங்குடியில் பெட்ரோல் பங்க் அருகே சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு பெயரளவில் ரோடு ஷோ நடத்தினார். அவரது ரோடு ஷோ மாலை 5.15 மணிக்கு தொடங்கி 5.30 மணிக்குள் முடிவடைந்தது. தொடர்ந்து, நேற்று மாலை திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் பேருந்து நிலையம் அருகே, திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே பிரசார வேனில் இருந்துவாறு பிரசாரம் செய்தார். அப்போது பிரதான கூட்டணி கட்சியான பாஜ பொறுப்பாளர்கள் பெயரை எடப்பாடி தவிர்த்தார். இதனால் கூட்டத்தில் இருந்த பாஜ தொண்டர்கள், பொறுப்பாளர்கள் அதிருப்தி அடைந்து பிரசாரம் முடியும் முன்பே கலைந்து சென்றனர்.
போலீசாருக்கு எடப்பாடி மிரட்டல்
திருவாரூர் பழைய பேருந்து நிலையம் முன்பாக எடப்பாடி பேசுகையில், ‘பாதுகாப்பு கொடுப்பது காவல்துறை கடமை. இங்கே உயர் அதிகாரி ஒதுங்கி இருப்பதை நான் கண்கூடாக பார்த்தேன். அதிகாரிகள் ஆகிய நீங்கள் ஒவ்வொரு மக்களும் செலுத்தும் வரிப்பணத்தில் தான் சம்பளம் பெறுகிறீர்கள். வேண்டுமென்றே திட்டமிட்டு நீங்கள் உங்களது கடமைகளில் இருந்து தவறினால் அதற்கான பலனை நிச்சயம் அனுபவப்பீர்கள். ஆட்சி மாற்றம் வரும். கீழே உள்ள சக்கரம் மேலே வரும். நீங்கள் நடுநிலைமையோடு இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நான் காவல்துறை அதிகாரிகளை மதிக்கின்றவன். நான் முதலமைச்சராக இருந்தபோது அவர்களுக்கு உரிய மரியாதை கொடுத்தேன். இவ்வாறு அவர் பேசினார்.