கூட்டணி ஆட்சி எனக்கூறும் அமித்ஷாவிற்கு பதிலடி தர முடியாதவர்; திமுக கூட்டணி கட்சிகளைப்பற்றி பேச எடப்பாடிக்கு அருகதை இருக்கிறதா..? அமைச்சர் கே.என்.நேரு கேள்வி
சென்னை: கூட்டணி ஆட்சி என்று மூச்சுக்கு முப்பது தடவை சொல்லும் அமித்ஷாவிற்கு பதிலடி தர முடியாத எடப்பாடி பழனிசாமி, திமுக கூட்டணிக் கட்சிகளைப் பற்றி பேச எந்த அருகதை இருக்கிறதா என்று அமைச்சர் கே.என்.நேரு கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று வெளியிட்ட அறிக்கை:
‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் பயணம் போய்க் கொண்டிருக்கும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தினம் தினம் கேலிக் கூத்துகளை அரங்கேற்றி நெட்டிசன்களுக்கு ட்ரோல் மெட்டிரியல் ஆகிக் கொண்டிருக்கிறார். கோவை பயணத்தில், “கம்யூனிஸ்ட் கட்சி கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து கொண்டே செல்கிறது. தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறதா, இல்லையா என்று முகவரி இல்லாமல் இருக்கிறது” என்று பேசியவர், சிதம்பரம் பயணத்தில், கூட்டணியில் சேர விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வெளிப்படையாக அழைப்பு விடுக்கிறார். ‘எங்கள் கூட்டணியில் சேர்ந்தால் ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்போம்’ என்கிறார். ’கோவையில் பேசியவரும் சிதம்பரத்தில் பேசியவரும் ஒரே ஆளா?’ என்று வாக்காளர் மண்டையைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
பழனிசாமி விரித்திருப்பது ரத்தினக் கம்பளம் அல்ல. பாஜவின் பாசிச ரத்தக் கம்பளம் என்பதை திமுகவின் தோழமை கட்சிகளும் மக்களும் அறிவார்கள். அதனால்தான் பழனிசாமியின் அழைப்பை கம்யூனிஸ்ட்டுகளும் விடுதலைச் சிறுத்தைகளும் நிராகரித்திருக்கின்றன. பாஜவோடு அதிமுக கூட்டணி வைப்பதற்குச் சில நாட்கள் முன்பு கூட, ’திமுக கூட்டணியில் இருக்கிற கட்சிகள் எந்தக் காலத்திலும் வளராது’ என விரக்தியாக பழனிசாமி சாபம் இட்டார். அப்படிப் பேசிய நாக்குதான், பிறகு கூட்டணிக்காகக் கெஞ்சின.
திமுக கூட்டணிக் கட்சிகளை விமர்சிக்கும் பழனிசாமி, என்றைக்காவது பாஜவை விமர்சித்திருக்கிறாரா? கூட்டணி ஆட்சி என்று மூச்சுக்கு முப்பது தடவை சொல்லிக் கொண்டிருக்கும் அமித்ஷாவிற்கு பதிலடி தர முடியாத கோழை பழனிசாமி திமுக கூட்டணிக் கட்சிகளைப் பற்றிப் பேச அருகதை இருக்கிறதா?
‘‘அமித்ஷா வீட்டின் கதவைத் தட்டினால் தான் தமிழ்நாட்டு மக்களின் பிரச்னை தீரும். அதனால் நாங்கள் அவர் வீட்டின் கதவைத் தட்டினோம்” என்று வெட்கமே இல்லாமல் சொல்கிறார் பழனிசாமி. அமித்ஷா வீட்டிற்குப் போவதாக இருந்தால் சொல்லிவிட்டுப் போக வேண்டியதுதானே! எதற்காக மக்கள் பிரச்னையை பேச கார்களில் மாறி மாறிப் போக வேண்டும்? ’டெல்லி அதிமுக அலுவலகத்தை பார்க்க வந்தேன்’ என ஏன் பொய் சொல்ல வேண்டும்?
தோல்வி மேல் தோல்வியடைந்து வரும் பழனிசாமி 2026 சட்டமன்றத் தேர்தலிலும் படுதோல்வி அடைவார் என்பது உறுதியானதால்தான் பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி கூட்டணிக் கட்சிகளுக்கு ஆள் பிடிக்க பஸ்சில் பயணிக்கிறார். 2021 தேர்தலில் பழனிசாமியின் பச்சைப் பொய்களை நம்பாமல், புறந்தள்ளிய மக்கள், 2024 நாடாளுமன்ற தேர்தலைப் போல 2026 தேர்தலிலும் பித்தலாட்ட பாஜ-அதிமுக கூட்டணியைப் புறக்கணித்து நம்பிக்கை நாயகனான முதல்வர் மு.க.ஸ்டாலினை மீண்டும் அரியணையில் ஏற்றுவார்கள். மக்களின் பேராதரவோடு திராவிட மாடல் 2.0 ஆட்சி தொடரும்.