Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுக்கு நன்றி: செல்வப்பெருந்தகை பேட்டி

சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அகன்ற திரையில் தேர்தல் முடிவுகள் ஒளிபரப்பப்பட்டது. இந்தியா கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை என தெரிந்ததும் ஆரவாரம் செய்தனர். பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள். அப்போது, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி 40 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 2 முதல் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின், மதிமுக, விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் காங்கிரஸ் சார்பில் நன்றியும், வாழ்த்தும் தெரிவித்து கொள்கிறோம். எங்களுடைய அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும், ராகுல் காந்தியும் தமிழ்நாட்டில் சூறாவளி பிரசாரம் செய்தார்கள்.

அவர்களுக்கும் எங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். உத்தரபிரதேசத்தில் 45 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னணியில் இருக்கிறது. ராமர் கோயிலை கட்டி இந்திய மக்களை மோடி ஏமாற்ற முயற்சி செய்தார். ஆனால், ராமரே பாஜவை நிராகரித்து விட்டார். தமிழ்நாட்டில் வந்து தியானம் செய்து எப்படியாவது அண்ணாமலையை வெற்றி பெற வைக்கலாம் என்று மோடி செயல்பட்டார். ஆனால், விவேகானந்தரும் பாஜவை நிராகரித்து விட்டார். கருத்து கணிப்புகள் அனைத்தும் பொய்யாகிவிட்டது. இந்தியாவை மீட்டெடுக்க வேண்டுமென்றால் அனைத்து ஜனநாயக கட்சிகளுடனும் எங்களுடைய தலைவர்கள் பேசுவார்கள். இதன் மூலம் கூட்டாட்சி தத்துவம் கொண்டு வரப்படும். மோடி ஆட்சி அகற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.