ஜால்பைகுரி: மேற்கு வங்க மாநிலம், ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள மொய்னாகுரியில் நடந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது பேசிய முதல்வர் மம்தா, ‘‘மேற்கு வங்கத்தில் ஊழல் குறித்து விசாரிப்பதற்காக பாஜ 300 விசாரணை குழுக்களை அனுப்பியது. ஆனால் அவர்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை. இப்போது பிரதமர் மோடி மேற்கு வங்க மக்களுக்கு பதிலளிக்க வேண்டியது அவசியமாகும்.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு நிதி என்ன ஆனது? ஏழை மக்கள் இந்த திட்டத்தின் கீழ் பணியாற்றினார்கள். ஆனால் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. பிரதமர் மோடி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை ஊழல் கட்சி என்கிறார். அவர் கண்ணாடியில் முதலில் தனது முகத்தை பார்க்க வேண்டும். அவரது கட்சி கொள்ளையால் நிரம்பியுள்ளது. பாஜ மேற்கு வங்கத்துக்கு எதிரான கட்சி. அவர்கள் பழங்குடியினர், தலித்துக்கள், ஓபிசிக்களை தேசிய குடிமக்கள் பதிவேட்டின் மூலமாக வெளியேற்றுவதற்கு திட்டமிட்டுள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் தேசிய குடிமக்கள் பதிவேட்டை ஒருபோதும் அனுமதிக்காது”என்றார்.