நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சி 48வது வார்டு பகுதியில் கச்சேரிரோட்டில் இருந்த பழைய அங்கன்வாடி மையத்தை இடித்துவிட்டு, நாகர்கோவில் பாஜ எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.18 லட்சம் செலவில் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டது. புதிய கட்டிடத்தை திறக்க எம்.ஆர்.காந்தி எம்எல்ஏவிடம் தேதி கேட்கப்பட்டது. அவரும் ஆனி மாதம் கடைசி நாளான நேற்று (16ம் தேதி) திறப்புவிழா நடத்துவதற்கான தேதி ஒதுக்கினார். அதற்கான ஏற்பாடுகளை அந்த வார்டு கவுன்சிலர் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் செய்தனர்.
அங்கன்வாடி மையத்திற்கு வரும் குழந்தைகள் புதிய ஆடைகள் அணிந்து, பெற்றோருடன் வந்து இருந்தனர். ஆனால் வெகுநேரமாகியும் எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ வரவில்லை. அவரை தொடர்பு கொண்டபோது இன்று அங்கன்வாடி மையத்தை திறக்க வேண்டாம். மேலும் ஆடி மாதம் குழந்தைகளை புதிய கட்டிடத்திற்குள் விடவேண்டாம். அதுக்கு அடுத்த மாதம் ஆவணியில் ஒருநாள் அங்கன்வாடி கட்டிடத்தை திறக்கலாம் என கூறினார். இதனை தொடர்ந்து அங்கு வந்த குழந்தைகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.