‘தொண்டர்களே இல்லாத கட்சியாக மாறி வருகிறது’ நாதக மாநில நிர்வாகிகள் கூண்டோடு விலகல்: சீமான் மீது பரபரப்பு குற்றச்சாட்டு
கடலூர்: நாம் தமிழர் கட்சியிலிருந்து மாநில ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் ஆறுமுகம், சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் முகம்மது அலி ஜின்னா, தகவல் தொழில்நுட்ப பாசறை மாநில துணைத்தலைவர் வினோத்குமார் ஆகியோர் விலகுவதாக நேற்று அறிவித்தனர்.
அதன்பின் கடலூரில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் ஆறுமுகம் கூறியதாவது:
வெற்றிக்கான திட்டங்கள் எதுமில்லாத கட்சியாக நாம் தமிழர் கட்சியை சீமான் மாற்றி உள்ளார். முரண்பாடுகளின் மொத்த உருவமாக பிதற்றல் வார்த்தைகளின் தலைமகனாக சீமான் உள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சி எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாத கட்சியாக ஒரே இடத்தில் இருக்கிறது. கட்சியில் சரியான கட்டமைப்பு இல்லை, அரசியல் பாதையில் இருந்து விலகி சென்று கொண்டிருக்கிறது. ஒரு தொகுதியில் 100 மாநில பொறுப்பாளர்கள் நியமிப்பதால், தொண்டர்கள் இல்லாத கட்சியாக உள்ளது. 234 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு ஓரிடத்தில்கூட டெபாசிட் பெறவில்லை. கட்சி தொடங்கி 15 ஆண்டுகளுக்குப் பிறகு 8% வாக்குகள் பெற்றுக்கொண்டு, எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஒரு அரசியல் கட்சியின் நோக்கம் என்பது வெற்றியாகத்தான் இருக்க முடியுமே தவிர, மாறாக பயிற்சி என்று சொல்லி கட்சியை பணயம் வைக்கிறார். தேசிய அளவில் எந்த கட்சியினரும் இல்லாத அளவிற்கு 12,000 மாநில நிர்வாகிகள் நியமித்து தொண்டர்களே இல்லாத மாநில நிர்வாகிகள் கொண்ட கட்சியாக மாற்றியுள்ளார்.
சீமான் அன்று பெரியாரின் மாணவன் என்றார். இன்று பெரியாரியத்தையே ஒழிப்பதே என் கடைமை என்கிறார். திமுகவின் நலன் விரும்பி என்றார். இப்போது திமுகவையே ஒழிப்பதையே என் கடமை என்கிறார். அதிமுக என்ற கட்சியே தமிழகத்தில் இன்று இல்லை என்பார். அதன் பொதுச்செயலாளர் பழனிசாமியை ஒரு ஆளா என்பார், பின்பு எனது சித்தப்பா என்பார் கூத்தாடி ரஜினியை ஒழிப்பதே கடமை என்பார், பின்பு அவர் வீட்டில கால்கடுக்க காத்திருப்பார்.
தமிழகத்தை புரட்டுவோம் என்பார். பின்பு தறிகெட்டவன் கொள்கையில்லாதவன், தகுதியில்லாதவன், தரங்கெட்டவன் என்பார். தன்னை தலைவனாக ஏற்று வந்த தன் கட்சி தம்பி, தங்கைகளையே பிசிறு என்பார், மசுறு என்பார், வேசி மகன் என்பார். இருந்தால் இரு, போனால் போ என்பார். தன்னை நாடி வந்தவர்களை பாதுகாப்பதை தவிர்த்து, வேலியே பயிரை மேய்வதுபோல செயலாற்றுவார். தலைவர் பிரபாகரன் தத்துவத்தை எற்பதாக கூறுவார். அவரின் நம்பிக்கைக்குரிய தளபதி பொட்டம்மானை என் கட்டைவிரல் மயிரென்பார். தலைமைக்குழு தொண்டர்களுக்கும் தொடர்பு இல்லாத இயக்கமாக நாம் தமிழர் தள்ளாடுகிறது.
நாம் தமிழர் கட்சியின் வாக்கென்பது திமுக, அதிமுக, பாஜக, காங்கிரசின் வெறுப்பு வாக்குகள்தானே ஒழிய, நாம் தமிழரின் ஆதரவு வாக்குகள் இல்லை என்பதை நாம் தமிழர் தலைமை உணர வேண்டும். உணராமல் போனது அவரின் அறியாமை, அறியாமையிலிருந்து விடுபட வேண்டும். எண்ணற்ற தன்னலம் கருதா தம்பிகளின் உழைப்பை மதித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை இனியாவது திருந்த வேண்டும் என்று விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார். இதைத் தொடர்ந்து, விலகிய அனைவரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர்.