Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரசியல் சாசனத்தின் மீது சத்தியம் செய்கிறேன் இந்தியா முழுவதும் வாக்குகள் திருட்டு: பெங்களூருவில் நடந்த வாக்குரிமை பேரணியில் ராகுல்காந்தி பேச்சு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் மட்டும் இன்றி இந்தியா முழுவதும் வாக்குகள் திருட்டு நடந்துள்ளது என அரசியல் சாசனத்தின் மீது சத்தியம் செய்து கூறுகிறேன் என பெங்களூருவில் காங்கிரஸ் சார்பில் நடந்த வாக்குரிமை பேரணியில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பேசினார். பெங்களூரு, சுதந்திர பூங்காவில் பாஜவின் தேர்தல் திருட்டு தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் சார்பில் போராட்டம், வாக்குரிமை பேரணி நடந்தது.

காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜூனகார்கே தலைமையில் நடந்த போராட்டத்தில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் பொது செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது: இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி அனைவருக்கும் வாக்குஉரிமை உள்ளது.

படித்தவன், படிக்காதவன், அதிகாரி, முதல்வர், பிரதமர் என எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவர்களுக்கு ஒரே ஒரு வாக்கு வழங்கப்பட்டுள்ளது. அரசியல் சாசனம் வழங்கிய இந்த உரிமையை முறைகேடுகள் மூலமாக பாஜ பறித்துள்ளது. 2024ல் நடந்த எம்பி தேர்தலில் கர்நாடக மாநிலம் பெங்களூரு மத்திய தொகுதியில் தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது.

இந்த முறைகேடு எப்படி நடந்தது? அதற்கான ஆதாரங்களை ஏற்கனவே வெளியிட்டு குற்றம் சுமத்தினேன். தேர்தலின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ ஆதாரத்தை கேட்டால் ஆணையம் தர மறுத்துவிட்டது. கடந்த 10 வருட வாக்காளர் டிஜிட்டல் பட்டியலை கேட்டாலும் அதுவும் தரப்படவில்லை. அதே நேரம் தேர்தல் ஆணையம் என்னிடம் பிரமாண பத்திரம் கேட்கிறது. பெங்களூரு மகாதேவபுரா சட்டப்பேரவை தொகுதியில் 1 லட்சத்து 250 போலி வாக்குகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஒரே வீட்டில் 70 முதல் 80 பேர் வாக்காளர் என சேர்க்கப்பட்டு இந்த முறைகேடு நடந்துள்ளது. கர்நாடகாவில் 15 முதல் 16 தொகுதியில் காங்.,கட்சிக்கு வெற்றி கிடைக்கும் என நாங்கள் நடத்திய கருத்து கணிப்பில் உறுதியானது. ஆனால், பாஜவின் வாக்கு திருட்டின் காரணமாக இந்த வெற்றி மாறிவிட்டது. தேர்தல் முடிந்த பிறகு வாக்கு பதிவின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்களை கேட்டால் அது தரப்படவில்லை. டிஜிட்டல் வாக்காளர் பட்டியல் கேட்கப்பட்ட போதும் அதுவும் கிடைக்கவில்லை. இவ்வாறு பாஜவின் கைப்பாவை போல் தேர்தல் ஆணையம் செயல்பட்டிருக்கிறது.

100 சதவீதம் முறைகேடு நடந்துள்ளது என்பதற்கான ஆதாரங்களை ஏற்கனவே வெளியிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினால் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுங்கள் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. பெங்களூரு மத்திய தொகுதியில் நடந்த வாக்கு திருட்டு எப்படி நடந்தது? இதன் பின்னணி , இதற்கான ஆதாரங்களை அதாவது போலி வாக்காளர் சேர்ப்பு உள்ளிட்ட அனைத்தையும் ஆதாரத்துடன் நிரூபித்து அரசியல் சாசனத்தின் மீது சத்தியம் செய்கிறேன்.

இதை விட வேறு என்ன செய்யவேண்டும்? போலி வாக்காளர்கள், நான்கைந்து மாநிலங்களில் ஒரு நபருக்கு வாக்குகள், வீட்டு எண் பூஜ்ஜியம், போலி முகவரி, ஒரே இடத்தில் 40, 50 வாக்காளர் இருப்பது என இந்த முறைகேடுகள் தொடர்பான ஆவணங்களுடன் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம். கர்நாடக மாநிலம் பெங்களூரு மத்திய தொகுதியில் மட்டும் இந்த வாக்கு திருட்டு நடைபெறவில்லை;

பீகார், மகாராஷ்டிரா என இந்தியா முழுவதும் வாக்கு முறைகேடு நடந்துள்ளன. பிரதமர் நரேந்திரமோடி மோசடி மூலமாகவே பிரதமராகியுள்ளார். பாஜவின் வாக்கு திருட்டுகளை நிரூபித்து காண்பித்து , பிரதமர் மோடியின் திருட்டுத்தனத்தை அம்பலப்படுத்துவேன். காலம் மாறும் அப்போது இதற்கு அனைவரும் பதிலளிக்க வேண்டி வரும். இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.

* தேர்தல் கமிஷன் முறைகேடு 25 கட்சி தலைவர்களுக்கு ராகுல் விளக்கம்

தேர்தல் கமிஷன் முறைகேடு தொடர்பாக டெல்லியில் நேற்று முன்தினம் இரவு 25 கட்சிகளின் தலைவர்களுக்கு ராகுல் காந்தி விருந்தளித்து விளக்கம் அளித்தார். டெல்லியில் உள்ள ராகுல்காந்தியின் இல்லத்தில் இந்த விருந்து நடந்தது. அந்த விருந்தில் 25 கட்சிகளைச் சேர்ந்த 50 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, திமுகவின் திருச்சி சிவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

* ராகுல் குற்றச்சாட்டு அணுகுண்டு அல்ல: ஒன்றிய அமைச்சர் ஆவேசம்

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் மோசடி செய்ததாக ராகுல் காந்தி தெரிவித்த குற்றச்சாட்டு அணுகுண்டு அல்ல. தான் அமர்ந்திருக்கும் மரக்கிளையை வெட்டிய கதை என்று ஒன்றிய அமைச்சர் பூபேந்தர் யாதவ் குற்றம் சாட்டினார். அவர் கூறுகையில்,’ கடந்த நவம்பரில் மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் எண்ணிக்கை 40 லட்சத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. ஆனால் ராகுல்காந்தி 1 கோடி வாக்காளர் அதிகரித்துள்ளதாக கூறுகிறார். அவர் 60 லட்சம் வாக்குகளை கூட்டி தெரிவித்துள்ளார். இனிமேல் அவரது அனைத்து கூற்றுகளையும் 60 சதவீதம் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்றார்.

* எல்லாமே சந்தேகம் தான் யோகேந்திர யாதவ் புகார்

ராகுல்காந்தி புகார் குறித்து ஸ்வராஜ் இந்தியாவின் தலைவர் யோகேந்திர யாதவ் கூறுகையில்,’ தேர்தல் ஆணையம் புனிதமானது என்று நான் எப்போதும் நம்புவேன். ஆனால் கர்நாடகாவில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியில் 1, 00,000 போலி வாக்குகள்.வாக்காளர் பட்டியலில் 1520% தவறானவை. மபி, அரியானா, மகாராஷ்டிரா தேர்தலுக்கு பிறகு தேர்தல் நடைமுறையில் ஏதோ சந்தேகம் இருப்பதாக உணர்ந்தேன்’ என்றார்.

* டெல்லியில் ஆம்ஆத்மி தோல்வியும் தில்லுமுல்லுதான்: சஞ்சய்சிங் எம்பி குற்றச்சாட்டு

தேர்தலில் தில்லுமுல்லு செய்து வெற்றிபெறும் பாஜவுக்கு மக்கள் புரட்சிதான் தீர்வு என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்பி.யுமான சஞ்சய் சிங் குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,’ டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் 10 ஆண்டு கால ஆட்சியில் கெஜ்ரிவால் மக்களுக்கு நல்ல பணிகளை செய்துள்ளார். இருந்தபோதிலும், சட்டப்பேரவை தேர்தலில் ஒரு மோசடி மூலம் ஆம் ஆத்மி தோற்கடிக்கப்பட்டது.

பாஜ தொண்டர்கள் ஆம் ஆத்மி ஆதரவாளர்களின் வாக்குகளை எவ்வாறு நீக்கினர் என்பதைக் கூறினோம். ஆனால், தேர்தல் ஆணையம் எங்கள் பேச்சைக் கேட்கவில்லை. ராகுல் காந்தியின் கூற்றுப்படி ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் பல வாக்குச்சாவடிகளில் பதிவு செய்யப்பட்டு வெவ்வேறு மாநிலங்களில் வாக்களித்துள்ளனர். இதன் மூலம் தேர்தல்களை பயனற்றதாக பாஜ மாற்றி வருகிறது’ என்றார்.

* வாக்காளர் பட்டியல் நீக்கப்படவில்லை

ராகுல்காந்தி புகாரை தொடர்ந்து பல்வேறு மாநில தேர்தல் ஆணைய இணையதளங்களில் வாக்காளர் பட்டியல் நீக்கப்பட்டு விட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் கூறுகையில்,’ மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளின் வலைத்தளங்களில் இருந்து வாக்காளர் பட்டியலை நீக்கவில்லை.

யார் வேண்டுமானாலும் வாக்காளர் பட்டியலைப் பதிவிறக்கம் செய்யலாம். பல மாநிலங்களுக்கான மின்னணு வாக்காளர் பட்டியல்கள் நீக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டும் ஒரு பயனரின் பதிவிற்கு இது பதில். ராகுல்காந்தி தனது அபத்தமான குற்றச்சாட்டுகளுக்கு அவர் தேசத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று குறிப்பிட்டது.

* தேர்தல் ஆணையத்துக்கு ராகுல் 5 கேள்வி

1.பெங்களூரு மத்திய தொகுதியில் நடந்த முறைகேடுகளுக்கான ஆவணங்கள் வழங்கியதுடன், தேர்தல் முறைகேடுகள் குறித்து கேள்வி கேட்டால் எதற்காக மிரட்ட வேண்டும்?

2.டிஜிட்டல் வாக்காளர் பட்டியல் ஏன் தரப்படவில்லை? இதற்கு என்ன காரணம்?

3.வாக்கு பதிவின் போது எடுக்கப்பட்ட வீடியோ எதற்காக அழிக்கப்பட்டது?. இது போல் மெகா மோசடி நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு அளித்தது ஏன்?.

4.கேள்வி கேட்பவர்களுக்கு பதில் அளிக்காமல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் மிரட்டுவது ஏன்?.

5.பாஜவின் ஏஜெண்ட் போல் தேர்தல் ஆணையம் மாறிவிட்டது ஏன்?

* வாக்காளர் பட்டியல் இணையதளம் முடக்கம்

ராகுல்காந்தி பேசுகையில், ‘பீகார் மாநில வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் குறித்து அனைவரும் கேள்வி கேட்பதால் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் இடம் பெற்ற இணையதளத்தை முடக்கி விட்டது. பெங்களூரு, லக்னோ, வாரணாசி என பல பல்வேறு மாநில வாக்காளர் பட்டியலில் ஒரே நபரின் பெயர் இடம் பெற்றுள்ளது.

வாக்கு திருட்டு தொடர்பான ஆதாரங்களை தேர்தல் ஆணையம் அழித்துவிட்டதாக நினைக்கிறது. ஆனால், எங்களிடம் ஆதாரம் இருப்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் உரிய பதில் அளிக்க வேண்டும். மாநில அரசின் சார்பில் இதுதொடர்பாக விசாரணை நடத்தி தவறு செய்த அனைவருக்கும் தண்டனை கிடைக்கச் செய்வோம்’ என்றார்.