அரசியலில் எப்படி இருந்தாலும் நாடு என்றால் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கமல்ஹாசன் எம்பி பேட்டி
சென்னை: நாடு என்று வந்தால் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கமல்ஹாசன் எம்பி கூறினார். இந்திய சர்வதேச திரைப்பட விழா ஆண்டுதோறும் கோவா மாநிலத்தில் நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவா தலைநகர் பனாஜியில் இன்று கோலாகலாக தொடங்குகிறது. வருகிற 28ம் தேதி வரை விழா நடைபெற உள்ளது. இதில், 81 நாடுகளைச் சேர்ந்த 240க்கும் அதிகமான படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்த ஆண்டு இந்திய பனாரமாவின் கீழ் திரையிட தமிழகத்தில் இருந்து 2 திரைப்படங்கள் மற்றும் ஒரு குறும்படம் தேர்வாகியுள்ளன. அதன்படி, சிவகார்த்திகேயனின் அமரன், நடிகர் அப்புக்குட்டியின் பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் இவி கணேஷ்பாபு இயக்கி நடித்துள்ள ஆநிரை என்ற குறும்படம் ஆகியவை திரையிடப்பட உள்ளன.
முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் எம்பி கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘அமரன் திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது’. அந்த அழைப்பை ஏற்று திரைப்பட குழுவினருடன் கோவா புறப்பட்டுள்ளோம். அரசியலில் எப்படி இருந்தாலும் சினிமா, நாடு என்று வந்தால் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அதற்கு இது ஒரு உதாரணம். நாட்டுக்கு தேவையான படத்தை நாங்கள் எடுத்து உள்ளோம். இதற்கு நாடு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற எங்கள் எதிர்பார்ப்பு நியாயமானதுதான். உலகத்தர சினிமா நிகழ்ச்சியில் எனது திரைப்படம் திரையிடப்படுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இது என் நாட்டிற்கும் பெருமை. தற்போது லோக்கல் அரசியலை இதில் பேச வேண்டாம். மருதநாயகம் திரைப்படத்தை மீண்டும் எடுக்க வேண்டும் என்பது எனது ஆசை பல தொழில்நுட்பங்கள் முன்னேறி இருக்கும் இந்த காலத்தில் அதுவும் சாத்தியம் என்பது தான் எனது எண்ணம்.


