Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரசியல் ஆதாயத்திற்காக எங்களை பயன்படுத்த வேண்டாம் பீகாரை விட தமிழ்நாட்டில் பாதுகாப்பாக இருக்கிறோம்: தொழிலாளர்கள் நெகிழ்ச்சி

கோவை: பீகாரில் பாஜ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் செய்த போது தமிழ்நாட்டில் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுவதாக கூறினார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட தமிழக அரசியல் கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். அதோடு பீகாரில் இருந்து வந்து தமிழ்நாட்டில் மேற்கு மண்டலத்தில் கட்டுமானம், நூற்பாலைகள், பனியன் நிறுவனங்கள், ஓட்டல்கள், விவசாயம், தொழிற்சாலைகள் என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் பீகார் தொழிலாளர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பீகார் மதுவாணி பகுதியை சேர்ந்த ராஜூ பாய்: பீகாரில் போதிய வேலை வாய்ப்பு கிடைக்காததால், கடந்த 2002ல் தமிழ்நாட்டிற்கு வந்தேன். ஈரோடு விவிசிஆர் நகரில் தங்கி, திருவேங்கடசாமி வீதியில் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் கடந்த 23 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறேன். பீகாரில் தற்போதும் ஒரு நாளைக்கு ரூ.300 வரை தான் கூலி கிடைக்கிறது. இங்கு ஒரு நாளைக்கு ரூ.500 முதல் ரூ.800 வரை கிடைக்கிறது. தீபாவளி போனஸ் கொடுக்கின்றனர்.

பீகார் கிராமத்தில் போதிய பஸ் வசதி, மருத்துவ வசதி இல்லை. இங்கு அனைத்து வசதிகளும் சிறப்பாக உள்ளதாலும், காலை உணவு, மதிய உணவுடன் இலவச படிப்பு கிடைப்பதால் குழந்தைகளை பள்ளியில் சேர்த்து இங்கேயே குடும்பத்துடன் தங்கி விட்டேன். பிரதமர் மோடி கூறியதை போல தமிழகத்தில் எங்களை யாரும் துன்புறுத்தவில்லை. நாங்கள் பீகாரில் இருப்பதை விட பாதுகாப்பாக, மகிழ்ச்சியாக உள்ளோம்.

பாட்னாவை சேர்ந்த சந்தோஷ் சர்மா: பீகாரில் வறுமையின் காரணமாக, 2005ல் எங்கள் ஊரில் இருந்து 40க்கும் மேற்பட்டோர் தமிழகத்திற்கு ரயிலில் வந்தோம். ஈரோட்டில் பிளம்பிங் மற்றும் கார்ப்பெண்டர் வேலை கற்று ஒரு நாளைக்கு ரூ.800 முதல் ரூ.1,000 வரை சம்பாதிக்கிறேன். இந்த வருமானத்தை கொண்டு எங்கள் ஊரில் சொந்த வீடு கட்டி இருக்கிறேன். அங்கு எனது மனைவி குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஆண்டுக்கு 10 மாதம் வேலை செய்வேன். 2 மாதம் பீகாருக்கு செல்வேன். எங்களுக்கு எந்த பிரச்னையும் இங்கு இல்லை. எங்களை யாரும் துன்புறுத்தவும் இல்லை.

மதுவாணி மாவட்டம் ரிங்கி தேவி: எனது கணவர் ஈரோட்டில் வேலை செய்கிறார். எனக்கு 2015ல் திருமணமானது. ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள ஜவுளி கடையில் வேலை செய்கிறேன். 2 மகன்கள் பெரியார் வீதியில் உள்ள தொடக்க பள்ளியில் தமிழ் வழியில் படிக்கின்றனர். எங்களை விட தமிழ் நன்றாக பேசுகின்றனர். அக்கம்பக்கம் வீட்டார்கள் ஊரை சேர்ந்த ஒருவராகத்தான் பார்க்கின்றனா். பீகாரில் இருப்பதை விட எங்கள் குழந்தைகளுக்கும், எங்களுக்கும் தமிழ்நாடு பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறோம்.

தர்பங்கா பகுதியை சேர்ந்த புல்பாபு: எங்களது பகுதியில் வேலை வாய்ப்பு இல்லாததால் வேலை தேடி திருப்பூருக்கு வந்தேன். இங்குள்ளவா்கள் எனக்கு பனியன் வேலைகளை கற்றுக்கொடுத்தார்கள். எந்த ஒரு பாகுபாடும் இன்றி என்னை நடத்துகின்றனர். பல்வேறு மாநிலங்களை சோ்ந்தவர்களும் ஒரே இடத்தில் வேலை செய்வதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

வைஷாலி பகுதியை சர்ந்த கௌரிசங்கர்: கடந்த 24 ஆண்டுகளாகவே திருப்பூரில் வேலை செய்து வருகிறேன். நான் எனது சொந்த ஊரில் வேலை செய்வது போன்ற உணா்வு எனக்கு எப்போதும் இருக்கும். விடுமுறை நாட்களில் சொந்த ஊரில் இருப்பது போல் தியேட்டா், மால், பார்க் போன்றவைகளுக்கும் சென்று மகிழ்ச்சியுடன் இருக்கிறோம்.

டீக்கடை நடத்தி வரும் குஷ்புகுமாரி: நாங்கள் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூருக்கு வந்தோம். தற்போது காட்டுவளவு பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறோம். எனது கணவா் டெய்லராக வேலை செய்கிறார். டீக்கடைக்கு வருகிறவா்கள் அனைவரும் அன்பாகவே பழகி வருகிறார்கள். எங்களது வாழ்வாதாரமும் உயா்ந்து இருக்கிறது.

கட்டிட தொழிலாளி சிராஜ்தீன்: நான் கடந்த 10 ஆண்டுகளாக ஊட்டியில் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறேன். எனது முதலாளி, நான் மற்றும் எனது போன்ற சக தொழிலாளர்கள் தங்குவதற்காக குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். ஒரு நாளைக்கு 1300 ரூபாய் ஊதியமாக எனக்கு கிடைக்கிறது. மாதம் ரூ.30,000 பீகாரில் உள்ள குடும்பத்திற்கு அனுப்பி விடுகிறேன். இதனால் எனது குழந்தைகளுக்கு நல்ல உணவு மற்றும் கல்வி கிடைக்கிறது. உடன் பணியாற்றுபவர்கள் சகோதரத்துவத்துடன் பழகுகின்றனர். எங்களை வைத்து யாரும் அரசியல் செய்து எங்களது வாழ்க்கையை கெடுத்து விட வேண்டாம்.

கோவை நவக்கரை தாகூர் ராம், சீதா தம்பதி: எங்கள் மாநிலத்தில் தொழில் வளம் இல்லாததால் ஒரு நேரம் உணவு கூட உண்ண வழியில்லாமல் வறுமையில் வாழ்ந்தோம். தமிழ்நாட்டுக்கு வந்த பிறகு மூன்று வேளையும் சுவையான உணவு உண்ணுகிறோம். பணம் சம்பாதித்து வீட்டுக்கு அனுப்புவதால் குடும்பம் வறுமையிலிருந்து மீண்டுள்ளது. தமிழர்கள் எங்களை மரியாதையாக நடக்கிறார்கள். இவ்வாறு அவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.