சென்னை: பஞ்சமி நில மீட்பு போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் சிறை சென்ற போராளிகளுக்கு திருமாமணி விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் திருப்போரூரில் நடந்தது. செங்கை வடக்கு மாவட்ட செயலாளர் கேது(எ) ெதன்னவன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் தமிழினி, பொன்னி வளவன், தமிழரசன், சாமுவேல் எபினேசர், எழிலரசு, மதி.ஆதவன், மேனகா தேவி கோமகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்போரூர் பேரூராட்சி மன்ற உறுப்பினர் பாரதி சமரன் வரவேற்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துக்கொண்டு, சிறை மீண்ட போராளிகளுக்கு திருமாமணி விருது மற்றும் ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கி, பேசியதாவது: ‘நாங்கள் கட்சி துவங்கிய கால கட்டத்தில் எங்களோடு அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்தவர்கள் காணாமல் போய் விட்டனர்’. அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. இப்போது, கட்சி ஆரம்பித்தவர்கள் கூட நம்மை ஏன் சீண்டுகிறார்கள் என்றால் நாம் அம்பேத்கர் பற்றியும், பெரியாரை பற்றியும், மார்க்ஸ் பற்றியும் பேசாமல் இருந்தால் யாரும் நம்மை பற்றி பேச போவது இல்லை. அவர்கள் சீண்ட சீண்ட நாம் வளர்வோம்.
தமிழ்நாட்டின் ஒவ்வொரு பிரச்னையிலும் நாம் களத்தில் நின்று மக்கள் பணியாற்றுகிறோம். நாம் லெட்டர் பேட் கட்சியாக இல்லை. சாதிப்பெருமை பேசக்கூடியவர்கள் இல்லை. நான் பேசும் அரசியலின் மூலம் எதிர்கட்சியினரின் முகத்திரை கிழிகிறது. அண்மையில் கூட உயர்நீதிமன்ற வளாகத்தில் எனது வாகனம் பைக் மீது மோதாத நிலையில் வேண்டும் என்றே பிரச்னை செய்தனர். திருமாவளவன் தனது கட்சியினரை ஏன் கண்டிக்கவில்லை என்று கேட்கின்றனரே தவிர ஒரு கட்சித் தலைவரின் பாதுகாப்பு குறித்து யாருமே கேள்வி எழுப்பவில்லை.
சினிமாவிலும் எங்களை பற்றி பேச வேண்டிய நிலை வந்து விட்டது என்பதே எங்களுக்கு வெற்றிதான். கட்சி துவங்குபவர்கள் எல்லாம் முதல்வராக வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கிறார்கள். முதல்வராவது என்பது நமக்கு பெரிதல்ல நமது அரசியல் களம் வேறு. இப்போது கூட நடிகரின் கட்சிக்கு ஒடுக்கப்பட்ட மக்கள் சென்று விடுவார்கள், திருமாவளவனின் கூடாரம் காலி என்று செய்தி பரப்புகிறார்கள். விஜயகாந்த் அரசியலுக்கு வந்தபோதும் இப்படித்தான் சொன்னார்கள். அரசியல் அறிவு பெற்றவர்கள் நடிகரின் பின்னால் செல்ல மாட்டார்கள். நமது கட்சியின் சேவை தற்போது தேசிய அளவில் தேவைப்படுகிறது.ஒவ்வொரு கிராமத்திலும் அம்பேத்கர் நூலகம் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, முன்னாள் துணை பொதுச்செயலாளர் விடுதலை செழியன், வழக்கறிஞர் எழில் கரோலின் உள்ளிட்டோர் பேசினர். திருப்போரூர் ஒன்றிய செயலாளர்கள் செல்வகுமார், விடுதலை நெஞ்சன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். நகர செயலாளர் ஆனந்தன் நன்றி கூறினார்.